ரகித பிணை விவகாரம்:இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் மறுபரிசீலனை மனு: பெப்ரவரியில் விசாரணை
புதிய இணைப்பு
ரகித ராஜபக்ச மற்றும் சரித் அபேசிங்க உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்களுக்குப் பிணை வழங்கிய கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள மறுபரிசீலனை மனுக்களை, 2027 பெப்ரவரி 9ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
CIABOC தாக்கல் செய்துள்ள மறுபரிசீலனை மனுக்கள் இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லால் பண்டாரா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களைப் பரிசீலித்த மேல் நீதிமன்ற நீதிபதி, மனுக்கள் மீது ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின் நவம்பர் 14ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு எதிர் மனுதாரர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், எதிர் மனுதாரர்களின் ஆட்சேபனைகளுக்கு எதிரான எதிர் ஆட்சேபனைகளை ஜனவரி 28ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

முதல் இணைப்பு
கொழும்பு மேல் நீதிமன்றில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு மறுபரிசீலனை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.
முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனான ரகித ராஜபக்ச மற்றும் சரித் அபேசிங்க உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்களுக்குப் பிணை வழங்கிய கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யக்கோரியே இந்த மறுபரிசீலனை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல்காரர் என்று கூறப்படும் ஹரக் கட்டாவின் மனைவியிடமிருந்து இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக மேற்குறித்த சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இன்று பரிசீலனை
இருப்பினும், அவர்களுக்கு 2026, ஜூலை 28ஆம் திகதியன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

இந்த மனு இன்று (30) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |