கெஹல்பத்தர பத்மே உள்ளிட்டோரின் தொலைபேசி தரவுகள் தொடர்பில் விசாரணை
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட கெஹல்பத்தர பத்மே (Kehelbaddara Padme) உள்ளிட்ட 5 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுக்களின் கையடக்கத் தொலைபேசி தரவுகள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டில் இருந்து மேற்கொள்ளப்பட்ட பல குற்றங்கள் தொடர்பான தகவல்களையும் கெஹல்பத்தர பத்மே தெரியப்படுத்தி உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அரசியல்வாதிகள் உட்பட பல தரப்பினர் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
தனது உயிருக்கு ஆபத்து
இதேவேளை, கொலை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவினால், தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சுறுத்தல் காரணமாக ஆதித்யா என்ற புனைப்பெயரில் வெளிநாடு சென்றதாக காவலில் உள்ள கெஹெல்பத்தர பத்மே தெரிவித்துள்ளார்.
அதிகாரி ஒலுகல இந்தோனேசியா வந்துள்ளதாக தகவல் கிடைத்ததும் தாங்கள் இருப்பிடத்தை மாற்றியதாகவும் அந்த முயற்சியும் வெற்றியளிக்கவில்லை என கெஹெல்பத்தர பத்மே குறிப்பிட்டுள்ளார்.
கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐந்து குற்றவாளிகளை இந்தோனேசியாவில் கைது செய்ய மேற்கொள்ளப்பட்ட ரகசிய நடவடிக்கை குறித்த தகவல்களை சில காவல்துறை அதிகாரிகள் கசியவிட்டதாக புலனாய்வாளர்கள் சந்தேகிப்பதாக தகவல் வெளியான நிலையில் கெஹெல்பத்தர பத்மே இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
