மாவீரர் நாளை முன்னிறுத்தி சமூக செயற்பாட்டாளர்கள் மீது தீவிர விசாரணை
தமிழர் தாயகத்தில் சிறிலங்கா இராணுவத்தின் தடைகளை தாண்டி மாவீரர் நாளுக்கான முன்னேற்பாடுகள் பொதுமக்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் முல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சிரமதான பணிகள்
இந்நிலையில் நேற்று சிரமதான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. சிரமதான பணிகளை முன்னெடுத்த பொது மக்களை இராணுவத்தினர் புகைப்படங்கள் மற்றும் காணொலிகளை பதிவு செய்து அச்சுறுத்தும் பாணியில் செயற்பட்டுள்ளனர்.
இருப்பினும் பொது மக்கள் தமது சிரமதான பணியை இடைநிறுத்தாது மேற்கொண்டுள்ளனர்.
தீவிர விசாரணை
இந்த நிலையில் மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகளை செய்யும் குடிசார் செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
இதன்படி நேற்று வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரி உள்ளிட்ட பலர் முல்லைத்தீவு காவல்துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறி மாவீரர் நாள் நினைவேந்தலை
செய்யக்கூடாது என காவல்துறையினர் எச்சரித்தாகவும்,
வழமைப்போன்றே நினைவேந்தலை நடத்துவோம் என தாம்
காவல்துறையினருக்கு விளக்கமளித்தாகவும், விசாரணைக்கு
சென்றிருந்த துரைராசா ரவிகரன் ஐ.பி.சி தமிழுக்கு குறிப்பிட்டார்.