உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் 90 வீதம் நிறைவு
இலங்கையில் இடம்பெற்ற ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகள் 90 வீதம் நிறைவடைந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
நேற்று (23) நாடாளுமன்றில் இடம்பெற்ற பாதீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பாதுகாப்பு அமைச்சின் செலவு தலைப்புத் தொடர்பில் நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டிருந்தது.
போர் நிறைவடைந்து 15 வருடங்கள்
இதன்போது, கருத்து தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நாட்டில் போர் நிறைவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள போதிலும், தொடர்ந்தும் நியாயப்படுத்த முடியாத அளவுக்கு பாதுகாப்பு அமைச்சுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது என்றால் அதைப்பற்றியும் சிந்திக்க வேண்டும் என தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
“இலங்கை தற்போது வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்ற சூழலில் 11 சதவீதம் பாதுகாப்புக்கு நிதி ஒதுக்கீடு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு, உற்பத்தியினை அதிகரிக்க வேண்டும், அத்துடன் கைத்தொழில் துறை குறித்தே அதிக கவனம் செலுத்த வேண்டும்.
நாடாளுமன்றில் நிறைவேற்றம்
பாதுகாப்பு செலவினம் குறித்து வாக்கெடுப்பை நடத்த வேண்டும்.” எனத் தெரிவித்தார்.
இதனடிப்படையில், நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பாதுகாப்புக்கான, செலவினத்திற்கு ஆதரவாக 76 வாக்குகளும், எதிராக 8 வாக்குகளும் அளிக்கப்பட்டாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு தொடர்பான செலவு தலைப்பு திருத்தங்களுடன் நேற்று நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |