ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம்: ஈரானியத் தூதரை நேரில் அழைத்து இந்தியா கடும் கண்டனம்
ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கொடி ஏந்திய சூப்பர் டேங்கர் உள்ளிட்ட வணிகக் கப்பல்கள் மீது ஈரானியப் படைகள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்திற்கு இந்தியா தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் உள்ள ஈரானியத் தூதரை நேரில் அழைத்த இந்திய வெளியுறவுச் செயலாளர், இச்சம்பவம் குறித்து இந்தியாவின் ஆழமான கவலையைப் பதிவு செய்துள்ளார்.
இந்தியக் கொடி ஏந்திய இரண்டு கப்பல்கள் மீது இன்று அதிகாலை நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலால் அக்கூட்டணியில் இருந்த பல கப்பல்கள் பாதி வழியிலேயே திருப்பி விடப்பட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் உறுதிப்படுத்தியுள்ளார்.
வணிகக் கப்பல்கள்
கடல்சார் வணிகக் கப்பல்கள் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பிற்கு இந்தியா அளிக்கும் அதீத முக்கியத்துவத்தை இச்சந்திப்பின் போது வெளியுறவுச் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவுக்கு வரும் கப்பல்களின் பாதுகாப்பான பயணத்திற்கு ஈரான் இதற்கு முன்பு வழங்கிய ஒத்துழைப்பை நினைவு கூர்ந்த புது டெல்லி, தற்போது நிலவும் அசாதாரணச் சூழலைக் கருத்தில் கொண்டு ஹோர்முஸ் நீரிணையைக் கடப்பதற்கான பாதுகாப்பான வழிமுறைகளை ஈரான் மிக விரைவில் மீண்டும் தொடங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தியப் பொருளாதாரத்தின் எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்யும் முக்கியப் பாதையில் இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்படுவது கவலையளிப்பதாக இந்தியா சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |