இஸ்ரேல் இராணுவத் தளபதியின் கணக்குகளில் ஊடுருவல்...!
ஈரானுடன் தொடர்புடைய ஹண்டலா (Handala) ஹேக்கர் குழு, இஸ்ரேலின் முன்னாள் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹலேவியின் (Herzi Halevi) மின்னணு சாதனங்கள் மற்றும் கணக்குகளை ஊடுருவிப் பாரிய அளவிலான ரகசியத் தரவுகளைக் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஹலேவியின் மிக ரகசியமான கூட்டங்கள், இராணுவ வரைபடங்கள் மற்றும் கட்டளை மையங்களின் நுணுக்கமான விவரங்கள் அடங்கிய 19,000-க்கும் மேற்பட்ட நிழற்படங்கள் மற்றும் காணொளிகளைத் தாங்கள் வசப்படுத்தியுள்ளதாக இக்குழு உரிமை கோரியுள்ளது.
அத்தோடு, ஹலேவி மற்றும் அவரது மனைவியின் அடையாள அட்டைகள் மற்றும் தனிப்பட்ட குடும்பப் புகைப்படங்கள் சிலவற்றையும் ஆதாரங்களாக ஹேக்கர்கள் வெளியிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தரவுகளின் நம்பகத்தன்மை
இந்தத் தரவுகளின் நம்பகத்தன்மையை இஸ்ரேலிய தரப்பு ஒன்று சிஎன்என் (CNN) நிறுவனத்திற்கு உறுதிப்படுத்தியுள்ள போதிலும் ஹலேவியின் பிரதிநிதிகள் இது குறித்து உத்தியோகபூர்வமாகக் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இக்குழு கடந்த மாதம் அமெரிக்க எஃப்பிஐ (FBI) இயக்குனர் காஷ் படேலின் மின்னஞ்சல்களை ஊடுருவிய பின்னணியிலும் இருந்தது.

தற்போது ஹலேவியைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் நஃப்தாலி பென்னட், பென்னி காண்ட்ஸ் மற்றும் யோவ் கல்லண்ட் உள்ளிட்ட இஸ்ரேலின் முக்கியத் தலைவர்களையும் தாங்கள் இலக்கு வைத்துள்ளதாக ஹேக்கர்கள் எச்சரித்துள்ளனர்.
லெபனான் மற்றும் ஈரான் உடனான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், நாட்டின் மிக ரகசியமான ஆவணங்களைக் கையாளும் உயர்மட்டத் தலைவர்களின் தரவுகள் இவ்வாறு கசிந்துள்ளமை இஸ்ரேலியப் பாதுகாப்புத் தரப்பில் பெரும் அதிர்வலைகளையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
முன்னெப்போதும் இல்லாத வகையில் நடத்தப்பட்டுள்ள இந்தச் சைபர் தாக்குதல், இஸ்ரேலின் உளவுத்துறை மற்றும் பாதுகாப்புத் திறனுக்கு விடுக்கப்பட்ட ஒரு பாரிய சவாலாகப் பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |