அமெரிக்காவுக்கு ஈரான் விடுத்துள்ள புதிய அச்சுறுத்தல்: குறிவைக்கப்படும் இராணுவத் தளங்கள்
அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் பட்சத்தில் அருகிலுள்ள இராணுவத் தளங்களை மட்டுமன்றி ஐரோப்பிய நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களையும் இலக்கு வைத்து ஈரான் தாக்குதல் நடத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளரான ஜெனரல் மொஹ்சென் ரெசாயி (Mohsen Rezaei) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க போர் விமானங்கள்
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
அமெரிக்க போர் விமானங்கள், ஐரோப்பிய நாடுகளிலுள்ள தங்கள் இராணுவத் தளங்களிலிருந்து புறப்பட்டு ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் அந்தப் விமானங்கள் புறப்படும் தளங்கள் அனைத்தும் ஈரானின் எதிரிடை இலக்குகளாகவே கருதப்படும் என்று ரெசாயி அறிவித்துள்ளார்.

தூரத்திலுள்ள அமெரிக்கத் தளங்கள் மற்றும் தீவுகள் மீதும் தாக்குதல்கள் விரிவுபடுத்தப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவுடனான ஈரானின் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளின் முதன்மை நிகழ்ச்சி நிரலாக லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் போரை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவருவது அமையும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
நேரடிப் பேச்சுவார்த்தை
தற்போது அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை என்றும் தங்களின் ஏழு நிபந்தனைகளை (Seven conditions) அமெரிக்காவிடம் வழங்கி அதற்குரிய தெளிவான பதிலுக்காக ஈரான் காத்திருப்பதாகவும் அவர் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், குவைத், ஈராக் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஒரு வலுவான வளைகுடா கூட்டமைப்பை உருவாக்குவதில் ஈரான் உறுதியாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் நடத்திய முந்தைய இராணுவத் தாக்குதல்களின் போது அமெரிக்க இராணுவத் தளங்களை மட்டுமே துல்லியமாக இலக்கு வைத்ததாகவும் வளைகுடா அரபு நாடுகளின் பொதுமக்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரான் மீதான போர் நடைமுறையில் முடிவுக்கு வந்துவிட்டது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த போதிலும் ஐரோப்பாவிலுள்ள அமெரிக்கத் தளங்கள் வரை தங்களின் தாக்குதல் வரம்பு நீட்டிக்கப்படும் என்ற ஜெனரல் மொஹ்சென் ரெசாயியின் இக்கூற்று, மத்திய கிழக்கு மோதலின் எல்லை சர்வதேச அளவில் விரிவடையும் அபாயத்தை உணர்த்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |