Father of All Bomb: அமெரிக்காவிற்கு எதிராக ஈரான் கையிலெடுத்துள்ள புதிய ஆயுதம்!
ஈரான், Father of All Bombs என அழைக்கப்படும் புதிய ஆயுதமொன்றை வெளியிடத் தயாராகி வருவதாக அறிவித்துள்ளது.
அமெரிக்கா தனது இராணுவக் கிடங்கிலுள்ள மிகப்பெரிய அணுஆயுதமற்ற குண்டான Mother of All Bombs - MOAB மூலம் ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்தநிலையில் அதற்குப் பதிலடியாகவே ஈரான் மேற்படி ஆயுதத்தை வெளியிட தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயத்தக் கட்டம்
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (IRGC) பேச்சாளர் ஹொசைன் மொஹேபி (Hossein Mohebbi) இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், நாங்கள் Father of All Bombs என்ற புதிய ஆயுதத்தை வெளியிடுவதற்கான ஆயத்தக் கட்டத்தில் உள்ளோம் எனவும் இது எதிரிகளுக்கு முற்றிலும் புதியதொரு அதிர்ச்சியாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இந்த புதிய ஆயுதத்தின் தொழில்நுட்ப விபரங்கள் மற்றும் அதன் அழிவுத் திறன் அல்லது அது எப்போது உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என்ற திகதி குறித்த விபரங்களை அவர் வெளியிட மறுத்துள்ளார்.
ஈரான் மீது மீண்டும் இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டால் ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மற்றும் நிலத்தடி அணுசக்தி நிலையங்களை இலக்கு வைத்து அமெரிக்காவின் மிகப்பெரிய அணுகுண்டு அல்லாத வழக்கமான வெடிபொருளான GBU-43/B MOAB குண்டுகளைப் பயன்படுத்தும் திட்டங்களை அமெரிக்க இராணுவம் தயாரித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்தநிலையில் அமெரிக்காவின் இந்த எச்சரிக்கைகளுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே, ஈரான் தனது புதிய இராணுவக் கண்டுபிடிப்பை முன்னிறுத்தி மனவியல் போர் உத்தியைக் கையிலெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |