பொத்தானில் விரல் வைத்துள்ள ஈரான் : அமெரிக்கா - இஸ்ரேலுக்கு கடும் எச்சரிக்கை
ஈரான் மீதான எந்தவொரு தாக்குதலையும் எங்களுக்கு எதிரான ஒரு முழு அளவிலான போர் என்று கருதுவோம் என ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் கடும் தொனியில் எச்சரித்துள்ளார்.
இந்த முறை எந்தவொரு தாக்குதலையும், வரையறுக்கப்பட்ட, வரையறுக்கப்படாத, துல்லியமான, இயக்கவியல் ரீதியானது என அதை அவர்கள் எப்படி அழைத்தாலும் சரி எங்களுக்கு எதிரான ஒரு முழு அளவிலான போராகவே நாங்கள் கருதுவோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடும் வகையில் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளதாவது,
கடுமையான பதிலடியை கொடுப்போம்
அமெரிக்காவின் அச்சுறுத்தலை எதிர்த்து போராடுவதற்கு ஆயதுல்லா கமேனி ஆட்சி தனது வசம் உள்ள அனைத்தையும் பயன்படுத்தும். எங்களை தாக்கினால் அதிகபட்ச பலத்துடன் கடுமையான பதிலடியை கொடுப்போம்.

மேலும் இதை முடிவுக்குக் கொண்டுவர சாத்தியமான மிகக் கடுமையான முறையில் நாங்கள் பதிலடி கொடுப்போம். அமெரிக்காவின் ராணுவக் குவிப்பு உண்மையான மோதலுக்காக அல்ல என்று நாங்கள் நம்புகிறோம்.
ஆனால் எங்கள் இராணுவம் மோசமான சூழ்நிலைக்கும் தயாராக உள்ளது. இதனால்தான் ஈரானில் அனைத்தும் உயர் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டு உள்ளன என்றார்.
பொத்தானில் விரல் வைத்துள்ளது
அதேபோல் ஈரான் ஆயுதப் படைகளின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது,

உச்ச தலைவர் ஆயதுல்லா அலி கமேனிக்கு எதிராக எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையும் பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தும். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அச்சுறுத்தல்களுக்குப் பதிலடியாக ஈரான் தாக்குதல் நடத்த ஒரு பொத்தானில் விரல் வைத்துள்ளது என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |