மற்றுமொரு நாடு மீதும் தாக்க தயாராகிறதா இஸ்ரேல் ? கடும் குழப்பத்தில் அந்நாடு
கத்தாரில் ஹமாஸ் தலைவர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து தங்கள் மீதும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிடுகிறதா? என்ற குழப்பம் துருக்கி அரசு வட்டாரத்தில் எழத் தொடங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக துருக்கி தலைநகா் அங்காராவில் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஜெகி அக்துா்க் கூறுகையில்,‘கத்தாரைத் தொடா்ந்து துருக்கியை குறிவைத்து தாக்குதல் நடத்தவும் இஸ்ரேல் தயாராகி வருகிறது. இது பேரழிவுக்கு வழிவகுக்கும்’ என்றாா்.
நெதன்யாகுவை ஹிட்லருடன் ஒப்பிட்டு விமர்சித்த துருக்கி ஜனாதிபதி
பாலஸ்தீனம் மற்றும் ஹமாஸ் அமைப்புக்குத் தொடா்ந்து ஆதரவளித்து வரும் துருக்கி ஜனாதிபதி எா்டோகன், காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு பலமுறை கண்டனம் தெரிவித்துள்ளாா். குறிப்பாக, காஸாவில் இனப்படுகொலை செய்வதாக குற்றஞ்சாட்டி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை ஹிட்லருடன் ஒப்பிட்டு கடுமையாக விமா்சித்துள்ளாா்.
இதேவேளை இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதற்கான செயல் திட்டங்களை வடிவமைக்க ஹமாஸ் அமைப்பின் முக்கியத் தலைவா்களுக்கு அடைக்கலம் அளித்து வருவதாக துருக்கி மீது இஸ்ரேல் குற்றஞ்சாட்டி வருகிறது.
துருக்கி அரசு வட்டாரத்தில் பரபரப்பு
ஈரான், சிரியா, யேமன் மற்றும் கத்தாா் ஆகிய நாடுகளை இஸ்ரேல் தாக்கியுள்ள சூழலில் அண்டை நாடுகளின் வான்பரப்பைப் பயன்படுத்தி தங்களை இஸ்ரேல் தாக்கக்கூடும் என துருக்கி அரசு வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
