யாழில் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்ட தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல்
புதிய இணைப்பு
தியாக தீபம் திலீபனின் 38வது நினைவேந்தல் நிகழ்வின் ஆரம்ப நாளான இன்று (15) காலை யாழ் தீவகத்தில் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.
தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் வேலணை வங்களாவடி சந்தியில் அமைந்துள்ள பொது நினைவுத் தூபியில் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றது.
இதன்போது பொதுச் சுடர் ஏற்றப்பட்டு தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வில் வேலணைபிரதேச சபையின் உறுப்பினர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இரண்டாம் இணைப்பு
யாழில் (Jaffna) தியாக தீபம் திலீபனின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தல் உணர்வெழுச்சியாக ஆரம்பமாகியது.
தமிழ் மக்களின் உரிமைக்காக 12 நாட்கள் உணவையும் நீரையும் ஒறுத்து உயிர்த் தியாகம் செய்த தியாகதீபம் திலீபனின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நல்லூரில் நடைபெற்றது.
நல்லூர் கந்தன் ஆலயம் அருகே அவர் உண்ணாவிரதம் இருந்த இடத்தில் அஞ்சலி நடைபெற்று, தொடர்ந்து, நல்லூரான் பின் வீதியில் அமைந்துள்ள திலீபன் நினைவிடத்தில் நினைவேந்தல் இடம்பெற்றது.
ஐந்து அம்சக் கோரிக்கை
இதன் போது பொதுச் சுடர் ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் நினைவேந்தல் நிகழ்வில் முன்னாள் போராளிகள், அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறை பொறுப்பாளரான திலீபன் இந்திய அமைதிப் படையிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை 1987 செப்ரெம்பர் 15ஆம் திகதி முன்வைத்து உணவையும் நீரையும் தவிர்த்து போராட்டத்தை முன்னெடுத்தார்.
அவரின் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படாத நிலையில் 1986 செப்ரெம்பர் 26ஆம் திகதி முற்பகல் 10.48 மணிக்கு உயிர்நீத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
தமிழ் மக்களின் உரிமைக்காக 12 நாட்கள் உணவையும் நீரையும் ஒறுத்து உயிர்த் தியாகம் செய்த தியாகதீபம் திலீபனின் 38வது ஆண்டு நினைவேந்தல் இன்று ஆரம்பமாகின்றது.
நல்லூர் ஆலயம் அருகே அவர் உண்ணாவிரதம் இருந்த இடத்தில் இன்று காலை 9.00 மணியளவில் அஞ்சலி நடைபெற்று தொடர்ந்து நல்லூரில் அமைந்துள்ள திலீபன் நினைவிடத்தில் நினைவேந்தல் ஆரம்பமாகும்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறை பொறுப்பாளரான திலீபன் இந்திய அமைதிப் படையிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை 1987 செப்டம்பர் 15 ஆம் திகதி முன்வைத்து உணவையும் நீரையும் தவிர்த்து போராட்டத்தை முன்னெடுத்தார்.
ஐந்து அம்சக் கோரிக்கை
கடந்த 38 வருடங்களுக்கு முன்னர் 23 வயதுடைய பல்கலைக்கழக மாணவனான திலீபனின் இந்த செயல் இந்த உலகத்தை திரும்பிப் பார்க்க வைத்தது.
தாயக கனவுடன், ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, உண்ணா நோன்பு நோற்று 12 நாட்கள் சொட்டு தண்ணீர் அருந்தாமல் தாயக கனவுடனேயே 1987 செப்டம்பர் 26 ஆம் திகதி முற்பகல் 10.48 மணிக்கு உயிர் நீத்தார்.
தியாக வரலாற்றை நினைவுறுத்தி ஒவ்வொரு வருடமும் தியாகதீபம் திலீபன் வாரத்தில் வடக்கு மற்றும் கிழக்கு தமிழர் தாயகம் உணர்வெழுச்சி கோலம் பூண்டு சிவப்பு மஞ்சள் வர்ண நினைவு அலங்காரங்களால் அலங்கரிக்கப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




