முடங்கும் வைத்தியசாலைகள் - போராட்டத்தில் குதிக்கும் வைத்தியர்கள்
நாடளாவிய ரீதியிலுள்ள அரச வைத்தியசாலைகளில் உள்ள வைத்தியர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில் போராட்டமானது இன்று (23) காலை 8 மணி முதல் 48 மணிநேர காலப்பகுதியில் இடம்பெறும் என சங்கம் அறிவித்துள்ளது.
வழமைப் போல் இயங்கும்
இலவச சுகாதார சேவை மற்றும் வைத்தியர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் சுகாதார அமைச்சு வழங்கிய இணக்கப்பாடுகளை நடைமுறைப்படுத்தத் தவறியமையினாலேயே இந்த தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், மகப்பேற்று வைத்தியசாலைகள், சிறுவர் வைத்தியசாலைகள், சிறுநீரக வைத்தியசாலைகள் மற்றும் புற்றுநோய் வைத்தியசாலைகள் என்பன வழமைப் போல் இயங்கும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம்
அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) 2026 ஜனவரி 23 முதல் நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால் விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் (AMS) தமது உறுப்பினர்கள் எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்பதையும், பொதுமக்களுக்கு தடையற்ற விசேட மருத்துவ சேவைகள் வழமைபோல் தொடரும் என்பதையும் தெளிவுபடுத்துகிறது.

விசேட வைத்திய நிபுணர்களின் நீண்டகால கோரிக்கைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளை தாமதப்படுத்தும் அல்லது பாதிக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் எமது சங்கம் வன்மையாக எதிர்க்கிறது. இத்தகைய தாமதங்கள் தொழில்முறை ஸ்திரத்தன்மைக்கும் நோயாளர் பராமரிப்பின் தரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என சங்கம் கருதுகிறது.
சுகாதாரத் துறையின் பிரச்சினைகளுக்கு ஆக்கபூர்வமான கலந்துரையாடலும் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகளுமே சிறந்த வழிமுறைகள் என விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் ( AMS) நம்புகிறது. நோயாளர்களின் உரிமையையும் வைத்தியர்களின் தொழில்முறை நேர்மையையும் பாதுகாக்க எமது சங்கம் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படும்.
செய்தி பிரதீபன்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |