"உடனடியாக வெளியேறுங்கள்" இஸ்ரேலுக்கு பகிரங்க மிரட்டல் விடும் ஈரான்
காசாவில் இருந்து இஸ்ரேல் உடனடியாக வெளியேற வேண்டும். இல்லாவிட்டால் பாரிய விளைவை சந்திக்க நேரிடுமென என ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பலஸ்தீனர்களின் நிலப்பகுதிகளை ஆக்கிரமித்து, அடக்குமுறை செய்வதாக கூறி இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் ஆயுதப் படையினர் நீண்ட காலமாக சண்டையிட்டு வருகிறார்கள்.
இதனைத் தொடர்ந்து கடந்த 7-ந் திகதி இஸ்ரேல் எல்லைக்குள் கடல், வான், சாலை வழியாக ஊடுருவிய ஹமாஸ் படையினர் தீவிர தாக்குதல் நடத்தினர்.
வெளிநாட்டவர் உள்பட 100 க்கும் மேற்பட்டோரை அவர்கள் பிணை கைதிகளாக பிடித்துச் சென்றனர். ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்தில் இஸ்ரேல் பதில் தாக்குதலை நடத்தி வருகிறது.
இஸ்ரேல் உடனடியாக வெளியேற வேண்டும்
காசா தெருக்களில் குண்டு மழை பொழிந்து பெரும்பாலான கட்டிடங்களை தரை மட்டமாக்கியது. காசா நகருக்குள் தரை வழியாக தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டது.
இந்த நிலையில், காசாவில் இருந்து இஸ்ரேல் உடனடியாக வெளியேற வேண்டும். இல்லாவிட்டால் ஒட்டுமொத்த முஸ்லிம்கள் மற்றும் இஸ்ரேல் எதிர்ப்பு படைகள் ஒன்றிணைவதை யாராலும் தடுக்க முடியாது என ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.
அதேவேளை, காசாவில் போர் தீவிரமடைந்தால் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் கணிசமான இழப்புகள் ஏற்படும் என ஈரானின் வெளிவிவகார அமைச்சர் அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.