"குளித்தால் குடிக்க தண்ணீர் இருக்காது":காசாவின் மக்களின் அவல நிலை!
இஸ்ரேல் - ஹமாஸ் தரப்பினரின் தாக்குதலில் மக்கள் 'குளித்தால் குடிக்க தண்ணீர் இருக்காது’ என்ற அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து 10 நாட்களாக நடந்து வரும் தாக்குதலில் இதுவரையில் பல் ஆயிரக்கணக்கனோர் பலியாகியுள்ளதோடு ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தும் உள்ளனர்.
தாக்குதல் என்றவுடன் உயிர் உடமைகள் பலியாவது மட்டுமே பிரதானமாக தெரிந்தாலும் மக்களின் அத்தியாவசிய தேவைகள் காரணமாக மக்கள் அவதியுறும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
அவலநிலைக்கு
இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலானது கடந்த 7 ம் திகதி ஆரம்பமாகிய நிலையில் லட்சக்கணக்கான மக்கள் காஸாவை விட்டு வெளிறியுள்ளனர்.
இஸ்ரேல் காஸாவுக்கான அத்தியாவசிய தேவைகளான உணவு, நீர், மின்சாரம் என்ற அனைத்தையும் நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு காசாவில் பல மக்கள் 10 நாட்களாகவே குளிக்காமல் இருக்கின்றனராம், இவர்கள் கழிவறைகள், குளியலறைகள் முன்னால் வரிசைகட்டி நிற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் குளிக்க குடிக்க என தண்ணீருக்காக காத்திருக்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் சுகாதாரமற்ற நீரை அருந்துவதால் வேறு பல நோய்களுக்கு உள்ளாக்கலாமென ஐ.நா. எச்சரித்துள்ளது.
ரஃபா எல்லையில்
இந்நிலையில், காசாவின் தெற்கே உள்ள ரஃபா எல்லையில் இருக்கும் அகமது ஹமீது என்ற 7 குழந்தைகளின் தாய்,"நான் குளித்து சில நாட்கள் ஆகிவிட்டன. கழிவறை செல்வதுகூட கடினமாக உள்ளது.
வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. உணவில்லை. கடைகளில் பொருட்கள் இல்லை. ஓரிரு இடங்களில் ஏதாவது கிடைத்தாலும் விலை உச்சத்தில் இருக்கிறது.
கொஞ்சம் சீஸ் கட்டிகளும், டூனா மீன் கேன்களும் மட்டுமே இருக்கின்றன. மிகுந்த சுமையை உணர்கிறேன். ஏதும் செய்ய இயலாதவளாக இருக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
மனிதாபிமானமும் கூட
மோனா அப்தல் ஹமீது என்ற காஸா பெண்ணொருவர்,"எங்கள் வீடு காசா வடக்கில் இருந்தது. இஸ்ரேல் தாக்குதலில் எல்லாம் இழந்து ரஃபாவில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று கொண்டிருக்கிறேன்.
வழியில் யாரென்றே தெரியாதவர்கள் சிலரின் வீடுகளில் தஞ்சமடைய நேர்ந்தது. எனக்கு தர்மசங்கடமாக இருக்கிறது. என்னிடம் போதிய ஆடைகள் கூட இல்லை.
கையில் இருப்பவை அழுக்கடைந்துவிட்டன. துவைக்க தண்ணீர் இல்லை. மின்சாரம் இல்லை. தண்ணீர் இல்லை. இணையம் இல்லை. மனிதாபிமானமும் கூட தீர்ந்துவிட்டதாகவே உணர்கிறேன்" தெரிவித்துள்ளார்.
மோசமான சூழலில்
மேலும், சபா மசாப் என்ற பெண் தனது கணவர், மகள் மற்றும் 21 உறவினர்களுடன் ரஃபாவில் உள்ள ஓர் உறவினர் வீட்டில் வசித்து வருகிறார். "நாங்கள் மோசமான சூழலில் வசிக்கிறோம். நாங்கள் யாருமே கடந்த சில நாட்களாகக் குளிக்கவில்லை.
தண்ணீர் பற்றாக்குறையால் தவிக்கிறோம்" என்றார். தண்ணீர் பெரும் பிரச்சனையாக இருப்பதாவும், ஒரு நாளுக்கான தண்ணீரை பெறுவது கூட கடினமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும்,''நாங்கள் குளித்தால் குடிக்க தண்ணீர் இருக்காது" என்று வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
காஸா மக்கள்
வடக்கு காஸாவிலிருந்து தெற்கு நோக்கி ரஃபா வந்தால் அங்கேயும் தாக்குதல் நடைபெறுகிறது.
மனிதாபிமானம் எங்கே? நாங்கள் எங்கே செல்ல வேண்டும்?? எங்கள் வாழ்நாள் முழுவதும் நாங்கள் எங்காவது இடம் பெயர்ந்து கொண்டேதான் இருக்கிறோம். தெருவில் தூங்குகிறோம். ஏதும் இல்லாமல் இருக்கிறோம்" என காஸா மக்கள் தெரிவித்துள்ளனர்.