ஹமாஸ் அமைப்பை நசுக்கி அழிப்போம்: தளபதியின் கருத்திற்கு பதிலடி..!
ஹமாஸிற்கு எதிரான போராட்டத்தை தொடர்வதில் உறுதியாக இருக்கிறோம். ஹமாஸ் அமைப்பின் ஒவ்வொரு உறுப்பினரையும் நசுக்கி அழிப்போம் என ஹமாஸ் தளபதி மஹ்மத் அல் ஜஹருக்கு பதில் கூறும் வகையில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 7 ஆம் திகதி முதல் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் கடும் போர் இடம்பெற்று வருகிறது. இந்த போரில் இருதரப்பிலும் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்து ஹமாஸ் தளபதி மஹ்மத் அல் ஜஹார் வீடியோ வெளியிட்ட நிலையில் அதற்கு பதில் கொடுக்கும் விதமாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு , ஹமாஸிற்கு எதிரான போராட்டத்தை தொடர்வதில் உறுதியாக இருக்கிறதாகவும் ஹமாஸ் அமைப்பின் ஒவ்வொரு உறுப்பினரையும் நசுக்கி அழிக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.
போர் தொடர்பில் கலந்துரையாடல்
மேலும், இஸ்ரேல் பாதுகாப்பு துறை மந்திரி யோவ் கேலன்ட் கூறுகையில், நாங்கள் ஹமாஸ் அமைப்பை பூமியில் இருந்து துடைத்து எறிவோம் என குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, முன்னாள் பாதுகாப்பு மந்திரி பென்னி காண்ட்ஸ் மற்றும் மந்திரிகளுடன் இந்த போர் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.
அதன்போது, கடந்த சனிக்கிழமை ஹமாஸ் அமைப்பின் தாக்குதல் மற்றும் அட்டூழியங்களை பட்டியலிட்ட அவர் ஹமாஸ் அமைப்பை வேரறுக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.