ஹமாஸால் திணறும் இஸ்ரேல் படைத்தரப்பு
இஸ்ரேலிய பிரதேசத்தில் இன்னமும் ஹமாஸ் ஆயுதாரிகள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை நிராகரிக்க முடியாதென இன்று(19) இஸ்ரேலிய இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி குறிப்பிட்டிருப்பது தனது எல்லைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இஸ்ரேல் திணறுவதை ஆதாரப்படுத்தியுள்ளது.
அத்துடன் கடந்த 7 ஆம்திகதி முதல் இதுவரை இஸ்ரேலிய படைத்தரப்பு மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 306 படையினர் கொல்லப்பட்டதையும் இஸ்ரேலிய இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
இஸ்ரேலிய படைத்தரப்பின் விபரங்கள்
அத்துடன்; 1,400 இஸ்ரேலிய பொதுமக்கள் இதுவரை கொல்லப்பட்டதாகவும் 203 இஸ்ரேலியர்கள் ஹமாசிடம் பணயக் கைதிகளாக இருப்பதாகவும் இராணுவத்தரப்பு குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேலிய படைத்தரப்பு இந்த விபரங்களை வெளியிட்ட அதே சமகாலத்தில், இஸ்ரேலுக்கு ஆதரவான நாடுகளின் தலைவர்கள் அந்த நாட்டுக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வரும் பயணங்கள் தொடர்கின்றன.
அந்த வகையில் இன்று பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் இஸ்ரேலுக்கு சென்று இஸ்ரேலிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்திய பின்னர் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளுக்குரிய பயணத்தை தொடர்கிறார்.
ரெல்அவியில் தரையிறங்கிய சுனக் ஹமாஸின் பயங்கரவாத தாக்குதல்களை கண்டனம் செய்தததுடன் பிரித்தானியா இஸ்ரேலுடன் நிற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஹமாஸை குறிவைத்து தாக்குதல்
இந்த நிலையில் மறுபுறுத்தே இஸ்ரேலும் ஹமாஸைச் சேர்ந்த முக்கிய தலைவர்களையும் அதன் தளங்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் உள்ள நூற்றுக்கணக்கான ஹமாஸ் உட்கட்டமைப்பு தளங்களை தாக்கியதாக இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது.