தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை காசாவில் பயன்படுத்தும் இஸ்ரேல் : எழுந்துள்ள குற்றச்சாட்டு
சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேலிய (Israel) ராணுவம் வடக்கு காசா (Gaza) பகுதியில் பயன்படுத்தியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வடக்கு காசா பகுதியில் உள்ள குடிமக்கள் மற்றும் மருத்துவர்கள் அளித்த சாட்சியங்களின்படி இதுவரை கண்டிராத புதியவகை ஆயத்தங்களை இஸ்ரேல் பயன்படுத்தி உள்ளதாகத் தெரிகிறது.
இந்த ஆயுதங்கள் மக்களை ஆவியாகச் செய்வதாக காசா சுகாதார அமைச்சக இயக்குனர் ஜெனரல் முனிர் அல்-புர்ஷ் (Munir Al-Bursh) தெரிவித்துள்ளார்.
வான்வழித் தாக்குதல்
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் , இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்கள் வடக்கு காசாவில் குடியிருப்பு கட்டடங்கள் இடிபாடுகளாகவும் தூசுயகவுமே மிஞ்சியுள்ளன.
இஸ்ரேலியப் படைகள் இதுவரை அறியப்படாத ஆயுதங்களை பயன்படுத்துகின்றன, இதன் விளைவாக மனித உடல்கள் ஆவியாகின்றன, இதன் மூலம் சரியான உயிரிழப்பு எண்ணிக்கையை கணக்கிடுவது தடுக்கப்படுகிறது.
இஸ்ரேல் இத்தகைய ஆபத்தான ஆயுதங்களைப் பயன்படுத்துவது காசாவில் புதிய அளவிலான அழிவை ஏற்படுத்தும்.
காசாவில் இஸ்ரேல் பயன்படுத்திய ஆயுதங்களின் வகைகள் மற்றும் பொதுமக்கள் மீது அவற்றின் தாக்கம் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச விசாரணை
மேலும் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேல் பயன்படுத்துவது தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்று ஹமாஸ் அமைப்பும் வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை தெர்மோபரிக் குண்டுகள் உட்பட சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேல் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் இதுகுறித்த சர்வதேச விசாரணை நடத்தப்பட என்று Euro-Med Human Rights Monitor அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த வகை குண்டுகள், முதலில் சிறிய தாக்கம் கொண்ட வெடிமருந்துகளைப் பயன்படுத்தி துகள்கள் நிரப்பிய மேகமூட்டத்தை உருவாக்குகிறது.
அதன் பின் இரண்டாவதாக வெடிக்கும் சாதனம் எரியக்கூடிய பொருட்களை கொண்டு மேக பகுதியை பற்றவைத்து, 2500 பாகை செல்சியஸ் வரை மிக அதிக வெப்பநிலையை உருவாக்குகிறது. இது தோல் மற்றும் உட்புற உடல் பாகங்களை கடுமையாக எரித்து சிதைகிறது.
குறிப்பாக இந்த மேகமூட்டம் அடர்த்தியாக ஏற்படுத்தப்படும் பகுதிகளில் உடல்கள் முழுமையாக உருகும் அல்லது ஆவியாகும் அளவிற்கு எரிகின்றன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |