காசாவில் தொலைத்தொடர்பு வசதிகள் மீளமைப்பு: 22 நாட்களாக தொடரும் யுத்தம்
இஸ்ரேல் போரினால் காசா பகுதியில் துண்டிக்கப்பட்ட தொலைபேசி, இணையம் மற்றும் பிற தகவல் தொடர்பு வசதிகள் மீளமைக்கப்பட்டுள்ளன.
22 நாட்களாக இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்துள்ளது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இதுவரை 1,405 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதேவேளை, ஹமாஸின் தாக்குதலுக்கு பதிலடியாக பலஸ்தீனத்தின் காசா முனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 7 ஆயிரத்து 703 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஐ.நா பாதுகாப்பு சபை கூட்டம்
இந்தநிலையில், நேற்றிரவு முதல் தொலைபேசி மற்றும் இணையத் தடையால் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள காசாவில் தொலைத்தொடர்பு மற்றும் இணைய இணைப்பை மீட்டெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நேற்று(28) பலஸ்தீனிய தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் இஷாக் சித்ர்(Ishaq Sidr) தெரிவித்திருந்நதார்.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் தகவல் தொடர்பு அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இஸ்ரேல் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட காசா மக்கள் வெளியுலகம் தெரியாமல் இருந்து வந்தனர்.
இந்நிலையில், காசாவின் பல பகுதிகளில் இன்று(29) தொலைபேசி மற்றும் இணைய இணைப்புகள் மீளமைக்கப்பட்டுள்ளதாக பலஸ்தீன அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, ஐ.நா பாதுகாப்பு சபை நாளை (30) மீண்டும் கூடவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், காசா பகுதியில் தரைவழித் தாக்குதல்களை விரிவுபடுத்தும் இஸ்ரேலின் நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு ஐக்கிய அரபு இராச்சியத்தின் வேண்டுகோளுக்கு இணங்க பாதுகாப்புச் சபைக் கூட்டம் கூட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.