காசாவின் மத்திய பகுதியில் அகதிமுகாம் மீது இஸ்ரேல் விமானப்படை குண்டுவீச்சு : பலர் பலி
மத்திய காசா பகுதியில் உள்ள நுசிராத் அகதிகள் முகாமில் உள்ள பல வீடுகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட குறைந்தது 13 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் மற்றும் பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று சனிக்கிழமை இரவு இந்த கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அகதிகள் முகாமில் உள்ள குடியிருப்புகள் மீது தாக்குதல்
இஸ்ரேலிய போர் விமானங்கள் அகதிகள் முகாமில் உள்ள அசார் மற்றும் ஜாகவுட் குடும்பங்களின் குடியிருப்புகள் மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்தியதில் குறைந்தபட்சம் 13 பொதுமக்கள் உயிரிழந்தனர். இடிபாடுகளில் இருந்து உயிர் பிழைத்தவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
காயமடைந்தவர்கள் காசாவின் மத்திய மாகாணத்தில் உள்ள அல்-அவ்தா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், மேலும் பலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி உள்ளனர்.
மற்றுமொரு குடியிருப்பு மீதும் தாக்குதல்
நுசிராத் அகதிகள் முகாம் மீதான தாக்குதலுக்கு மேலதிகமாக இஸ்ரேலிய போர் விமானங்கள் காசா நகரில் உள்ள அல்-ஜலா வீதியில் உள்ள மக்களின் குடியிருப்பு பகுதியிலும் தாக்குதலை மேற்கொண்டன.இங்கும் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் இரண்டும் பதிவாகியுள்ளன.
காயமடைந்தவர்கள் உடனடியாக அல்-அஹ்லி பாப்டிஸ்ட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஒக்டோபர் 7 ம் திகதி காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதல் தொடங்கியதில் இருந்து, 6,500 குழந்தைகள் மற்றும் 4,500 க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 16,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 38,000 பேர் காயமடைந்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |