போருக்குப் பின்னராக காசா நிர்வாகம் : வெளியானது இஸ்ரேலின் பூர்வாங்கத் திட்டம்
போருக்குப் பின்னராக காசா நிர்வாகம் தொடர்பில் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு பூர்வாங்கத் திட்டம் ஒன்றை முதல் முறை வெளியிட்டுள்ளது.
போர் நடவடிக்கை நிறைவடைந்த பின் அந்தப் பகுதியில் இஸ்ரேலோ அல்லது ஹமாஸோ ஆட்சி புரியாது என்று அந்தத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் இஸ்ரேல் பயணித்த நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு இந்தத் திட்ட வெளியிடப்பட்டது.
போர் நிறுத்தம் ஒன்றுக்கான அழுத்தம்
காசாவில் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்த பின் பிளிங்கன் நான்காவது முறையாகவே மத்திய கிழக்கு விரைந்துள்ளார்.
காசாவில் இஸ்ரேல் தொடர்ந்தும் வான், தரை மற்றும் கடல் மார்க்கமாக தீவிர தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் போர் நிறுத்தம் ஒன்றுக்கான அழுத்தம் அதிகரித்திருக்கும் சூழலில் போருக்கு பின்னரான காசாவின் எதிர்காலம் குறித்து கேள்விகளும் பரவலாக எழுப்பப்பட்டு வருகின்றன.
காசாவில் ஆயிரக்கணக்காக மக்கள் வெளியேற்றப்பட்டு பஞ்சம் மற்றும் நோய் பரவல்களுக்கு முகம்கொடுத்து வருவதோடு மானிதாபிமான நெருக்கடி ஒன்று பற்றி ஐ.நா எச்சரித்துள்ளது.
காசா குடிமக்கள் பலஸ்தீனர்களாவர்
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கல்லன்ட் மூலம் வெளியிடப்பட்ட போருக்குப் பின்னரான திட்டம் இஸ்ரேலின் போர் அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பதற்கு முன் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டது.
அதில் “காசாவில் ஹமாஸ் ஆட்சி புரியாது, (மற்றும்) காசா பொதுமக்களை இஸ்ரேல் ஆளாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், “காசா குடிமக்கள் பலஸ்தீனர்களாவர், அதனால் விரோத செயற்பாடுகள் அல்லது இஸ்ரேலுக்கு அச்சுறுத்தல் இருக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் பலஸ்தீன கட்டமைப்பு ஒன்றே அங்கு பொறுப்பாக இருக்கும்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் இந்தத் திட்டத்தின்படி காசாவின் ஒட்டுமொத்த பாதுகாப்பு இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதோடு இஸ்ரேலிய குண்டு மழையால் பெரும் அழிவை சந்தித்திருக்கும் அந்தப் பகுதியின் மீள் கட்டுமானத்தில் பன்னாட்டு தரப்பு பொறுப்பேற்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் இந்தத் திட்டம் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து போர் புரிந்து வருவதோடு ஒக்டோபர் 7 ஆம் திகதி கடத்திச் செல்லப்பட்ட பணயக்கைதிகள் பாதுகாப்பாக திரும்புவது மற்றும் ஹமாஸ் இராணுவ மற்றும் ஆட்சி திறன் ஒழிக்கப்படும் வரை போர் நீடிக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.
உள்ளூர் பலஸ்தீன கட்டமைப்புகள் காசாவில் ஆட்சியை ஆரம்பிக்கும்போது புதிய கட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படும் என்று அந்தத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |