இலங்கையில் இஸ்ரேலிய மதஸ்தலங்கள்: அரசாங்கம் அளிக்கும் விளக்கம்
இலங்கையில் அமைந்துள்ளதாகக் கூறப்படும் இஸ்ரேலிய மதஸ்தலங்கள் முறையான மத நிறுவனங்கள் என அடையாளம் காணப்படாததால், அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என்று புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் கமகேதர திசாநாயக்க, தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு வழங்கிய தனிப்பட்ட செவ்வியில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அடையாளம் காணப்பட்டுள்ள குறித்த இடங்கள் இஸ்ரேலிய மத நடைமுறைகளை மக்கள் மேற்கொள்வதாகக் கூறப்படும் இடங்களாக மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்ட நடவடிக்கை
“அவை அங்கீகரிக்கப்பட்ட மத நிறுவனங்கள் அல்ல. சிலர் மத நடவடிக்கைகள் நடைபெறுவதாகக் கூறியுள்ளனர். இவை மத நிறுவனங்களாக முறையாகப் பராமரிக்கப்பட்டாலோ அல்லது அங்கு நடத்தப்பட்ட ஏதேனும் நடவடிக்கைகள் தேசிய பாதுகாப்பு அல்லது சமூக நல்லிணக்கத்தைப் பாதித்தாலோ, நாங்கள் சட்ட நடவடிக்கை எடுக்கலாம்.

ஆனால் இந்த விடயத்தில், நாங்கள் அவ்வாறு செய்ய முடியாது," என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், அடையாளம் காணப்பட்ட இந்த இடங்களை அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த விடயம் தொடர்பில் கடந்த வாரம் புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி நாடாளுமன்றத்திலும் உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        