பேரிடருக்கு முடிவுகட்ட இந்தியா எடுத்த முடிவு..! ஏவ தயாராகும் உந்துகணை
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, 'இன்சாட்-3 டிஎஸ்' எனும் செயற்கைக் கோளை இன்று விண்ணில் ஏவவுள்ளது.
வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக இந்த செயற்கைக் கோள் ஏவப்படவுள்ளது.
இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் இரண்டாயிரத்து 275 கிலோ எடையுடன் 25 விதமான ஆய்வுக் கருவிகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
விண்வெளி ஆய்வு மையம்
இவை புவியின் பருவநிலை மாறுபாடுகளை துல்லியமாகக் கண்காணித்து வானிலை தகவல்களை நிகழ் நேரத்தில் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-14 உந்துகணை மூலம் இன்று மாலை 5.35 மணிக்கு இந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படவுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இதற்கான ஜி.எஸ்.எல்.வி. உந்துகணை மற்றும் செயற்கைகோள் தயார் நிலையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அத்துடன், எரிபொருள் நிரப்பப்பட்ட நிலையில் உள்ள உந்துகணை மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணித்து வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
34 ஆயிரம் கி.மீ உயரம்
இந்த செயற்கைக்கோள் 34 ஆயிரம் கி.மீ உயரத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளதாகவும் இதன்மூலம் சென்னையில் பெருமழை உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே அறிந்து தேவையான முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளலாம் எனவும் இஸ்ரோ விஞ்ஞானி வெங்கடேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்த செயற்கைக்கோளின் மூலம் பெறப்படும் தகவல்கள், மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், கடல்சார் ஆய்வு மையம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை நேரடியாக சென்றடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |