அடுத்த சாதனைக்கு தயாராகும் இஸ்ரோ - சூரியனுக்கு அனுப்பப்படும் ஆதித்யா எல்-1 விண்கலம்
சந்திரயான்-3 விண்கலத்தின் வெற்றிக்குப் பிறகு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அடுத்த ஆராய்ச்சிக்கு தயாராகி வருகிறது.
சூரியனை ஆய்வு செய்யும் நோக்கிலான இந்த திட்டத்திற்கு ஆதித்யா எல்-1 மிஷன் ஆய்வு என பெயரிடப்பட்டுள்ளது.
அதாவது, விண்வெளியில் வானிலையின் இயக்கவியல், சூரியனின் கரோனாவின் வெப்பநிலை, சூரிய புயல்கள் மற்றும் உமிழ்வுகள் மற்றும் புற ஊதா கதிர்கள் பூமியில், குறிப்பாக ஓசோன் படலத்தின் விளைவுகள் ஆகியவற்றை இதனால் ஆய்வு செய்ய முடியும் என விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
செப்டம்பர் 2 ஆம் திகதி
ஆதித்யா-எல்1 மிஷன் செப்டம்பர் 2ஆம் திகதி அனுப்பப்படும் எனத் தெரிகிறது. சூரியனைக் கண்காணிக்கும் முதல் இந்திய விண்வெளிப் பயணம் இதுவாகும்.
இந்த பணியின் கீழ் பல்வேறு வகையான தரவுகள் சேகரிக்கப்படும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர், இதனால் தீங்கு விளைவிக்கும் சூரியக் காற்று மற்றும் புயல்கள் பற்றிய தகவல்கள் கிடைத்தவுடன் எச்சரிக்கைகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக IUCAA விஞ்ஞானியும், SUIT இன் தலைமை ஆய்வாளருமான பேராசிரியர் துர்கேஷ் திரிபாதி செய்தி நிறுவனத்திடம் கூறும்போது,
"இஸ்ரோவின் சூரியப் பயணம் 'ஆதித்யா L-1' ஆகும், இது பூமியிலிருந்து சூரியனுக்கு 1.5 மில்லியன் கிலோமீட்டர்கள் சென்று சூரியனை ஆய்வு செய்யும் என்றார்.
மேலும் கூறிய அவர், சூரியன் நிறைய புற ஊதா கதிர்களை வெளியிடுகிறது மற்றும் இந்த தொலைநோக்கி (SUIT) 2000-4000 ஆங்ஸ்ட்ரோம்களின் அலைநீளத்தின் புற ஊதா கதிர்களை ஆய்வு செய்யும். இந்த அளவு புற ஊதா கதிர்கள் உலகில் இதுவரை ஆய்வு செய்யப்படவில்லை என்று கூறினார்.
இது தொடர்பில் மற்றொரு IUCAA விஞ்ஞானி பேராசிரியர் A.N.ராம் பிரகாஷ் கூறுகையில்,
ஆதித்யா எல்-1 உடன் 7 பேலோடுகளும் விண்வெளிக்கு அனுப்பப்படும். இந்த பேலோடுகள் சூரியனின் ஒளிக்கோளம், குரோமோஸ்பியர் மற்றும் வெளிப்புற அடுக்கு ஆகியவற்றை ஆய்வு செய்யும்.
ஏழு பேலோடுகளில் நான்கு சூரியனைத் தொடர்ந்து கண்காணிக்கும், மூன்று பேலோடுகள் நிலைமைகளுக்கு ஏற்ப துகள்கள் மற்றும் காந்தப்புலங்களைப் படிக்கும். சூரியனின் மேற்பரப்பில் சில வெடிப்புகள் இருப்பதாக அவர் கூறினார்,
செயற்கை நுண்ணறிவு
ஆனால் அது எப்போது நிகழும், அதன் விளைவுகள் என்ன என்பது பற்றிய சரியான தகவல்கள் இல்லை. அத்தகைய சூழ்நிலையில், இந்த தொலைநோக்கியின் நோக்கங்களில் ஒன்று அவற்றைப் படிப்பதும் ஆகும்.
"இதற்காக, செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான உறுப்பை நாங்கள் உருவாக்கியுள்ளோம், இது அதன் தரவுகளை (வெடிப்புகள்) சேகரித்து மதிப்பீடு செய்யும்" என்று பேராசிரியர் ராம்பிரகாஷ் கூறினார்.