இஸ்ரேலுக்கு இலங்கையர்கள் அனுப்புவதில் சிக்கல்: அரசாங்கம் வழங்கிய விளக்கம்
இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள பலஸ்தீன இடங்களுக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அனுப்புவதை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர பலஸ்தீன நாடு என்ற நிலைப்பாட்டை இலங்கை தொடர்ந்து கடைப்பிடித்து வருவதாகவும், பலஸ்தீனத்திற்கு எதிரான இஸ்ரேலின் விரோதப் போக்கை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்றும் அவர் ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.
பொருளாதார பாதிப்பு
எனினும், இஸ்ரேலுடனான பொருளாதார உறவுகளை இலங்கை திடீரென நிறுத்த முடியாது என்றும், பல நாடுகளைப் போல இஸ்ரேலுடனான இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை இலங்கை தொடரும் என்றும் அமைச்சர் பிமல் கூறியுள்ளார்.
அத்துடன், இஸ்ரேலுடனான உறவுகளை இலங்கை திடீரென நிறுத்தினால், அது பொருளாதாரத்தை பாதிக்கும் என சுட்டிக்காட்டிய அமைச்சர், பலஸ்தீனத்துடன் நிற்கும் ஆனால் இராஜதந்திர மற்றும் பொருளாதார நோக்கங்களுக்காக இஸ்ரேலுடன் உறவுகளைத் தொடரும் சவுதி அரேபியா, சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளைப் போலவே இலங்கையும் செயற்படும் என தெரிவித்துள்ளார்.
பொருளாதார உறவு
இலங்கை ஒரு சுதந்திர பாலஸ்தீன நாடு மற்றும் ஒரு சுதந்திர இஸ்ரேல் அரசை நம்புகிறது என்றும், இலங்கை இஸ்ரேலுடன் அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளைத் தொடர வேண்டும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை இஸ்ரேலுக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அனுப்புவதை நிறுத்த வேண்டும் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமின் சமீபத்திய அறிக்கை குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் வகையல் அமைச்சர் மேற்கண்ட கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
