சாவகச்சேரி பிரதேச சபையில் ஆட்சியமைக்கும் தமிழரசுக்கட்சி
புதிய இணைப்பு
யாழ். சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியை சேர்ந்த பொன்னையா குகதாசன் திருவுளச் சீட்டு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு நேற்று (23) பிற்பகல் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது.
இதன்போது தவிசாளரை தெரிவு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியை சேர்ந்த செல்வரத்தினம் மயூரனும், இலங்கைத் தமிழரசுக் கட்சியை சேர்ந்த பொன்னையா குகதாசனும் முன்மொழியப்பட்டனர்.
இதில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியை சேர்ந்த செல்வரத்தினம் மயூரனுக்கு ஆதரவாக, அகில இலங்கை தமிழ் காங்கிரஸை சேர்ந்த 5 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியை சேர்ந்த 5 உறுப்பினர்கள் என மொத்தமாக 10 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
திருவுளச் சீட்டு மூலம் தெரிவு
இலங்கைத் தமிழரசுக் கட்சியை சேர்ந்த பொன்னையா குகதாசனுக்கு ஆதரவாக, அதே கட்சியைச் சேர்ந்த 8 உறுப்பினர்களும், தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் தலா ஒரு உறுப்பினர் என மொத்தமாக 10 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த 6 உறுப்பினர்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸை சேர்ந்த செல்வரத்தினம் ஆணந்தகுமார் என்ற உறுப்பினரும் வாக்களிப்பில் கலந்துகொள்ளாது நடுநிலையாக செயற்பட்டனர்.

அத்தோடு அகில இலங்கை தமிழ் காங்கிரஸை சேர்ந்த யோகநாதன் கல்யாணி எனும் உறுப்பினருக்கு நீதிமன்றம் இடைக்கல தடை விதித்துள்ளது.
போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்களும் தலா 10 வாக்குகளை பெற்ற நிலையில் திருவுளச் சீட்டு மூலம் இலங்கைத் தமிழரசுக் கட்சியை சேர்ந்த பொன்னையா குகதாசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து இடம்பெற்ற பிரதித் தவிசாளர் தெரிவில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸை சேர்ந்த இராமநாதன் யோகேஸ்வரன் 11 வாக்குகளை பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
28 உறுப்பினர்களை கொண்ட சாவகச்சேரி பிரதேச சபைக்கு, இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் 8 உறுப்பினர்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் 7 உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்தி சார்பில் 6 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பில் 5 உறுப்பினர்களும், தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் தலா ஒரு உறுப்பினரும் நடந்து முடிந்த தேர்தலில் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் இணைப்பு
கிளிநொச்சி (Kilinochchi) பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் சுப்பிரமணியம் சுரேன் ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டார்.
பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி பாபு தலைமையில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை சபை மண்டபத்தில் இன்று (23) நடைபெற்றது.
இதன்போது இலங்கை தமிழரசுக்கட்சி சார்பில் சுப்பிரமணியம் சுரேனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டபோது ஏனைய தெரிவு இல்லாத நிலையில் சுப்ரமணியம் சுரேன் தெரிவு செய்யப்பட்டார்.
பச்சிலைப்பள்ளி பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக்கட்சி சார்பாக 06 உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்தி சார்பாக 03 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி சார்பாக 03 உறுப்பினர்களும் அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் சார்பாக 01 உறுப்பினரும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் உப தவிசாளராக சிவகுரு செல்வராசா தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு
4 தசாப்தங்களின் பின் மூதூர் பிரதேச சபையை கைப்பற்றிய தமிழரசுக்கட்சி
திருகோணமலை - மூதூர் பிரதேச சபையின் (Mutur Pradhesiya sabha) தவிசாளராக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் (ITAK) செல்வரெத்தினம் பிரகலாதன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு பிரதேச சபை மண்டபத்தில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இன்று (2025.06. 23) இடம்பெற்றது.
இதன்போது தவிசாளர் தெரிவில் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 22 உறுப்பினர் கலந்து கொண்டனர்.
தமிழரசுக் கட்சி
இவர்களில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் 5, சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் சார்பில் 4, தேசிய மக்கள் சக்தி சார்பில் 3, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் 3, ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் 2, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி சார்பில் 2, தேசிய காங்கிரஸ் சார்பில் 1, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பில்1, சுயேட்சைக் குழு 1 என இச் சபையில் அங்கம் வகிக்கின்றனர்.

தவிசாளர் தெரிவில் இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த செ.பிரகாலதன் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த எம்.றிபான் ஆகிய இருவர் போட்டியிட்டனர்.
இதில் திறந்த வாக்கெடுப்பின் மூலம் இலங்கைத் தமிழரசுக் கட்சி சபையை கைப்பற்றிய நிலையில் குறித்த சபையின் உப தவிசாளராக சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பி.டி.எம்.பைசர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.
இதேவேளை கடந்த நான்கு தசாப்தங்களுக்கு பின்னர் தமிழர் ஒருவர் மூதூர் பிரதேச சபையின் தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் கலகம் செய்வாரா பிமல்..! 15 மணி நேரம் முன்