தமிழரசுக் கட்சியின் உறுப்புரிமை விவகாரம்: நீதிமன்றின் அதிரடி உத்தரவு
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) உறுப்புரிமையில் இருந்து தம்மை இடைநிறுத்தி கட்சி எடுத்த முடிவுக்கு, இடைக்காலத் தடை விதிக்குமாறு வலிகாமம் வடக்குப் பிரதேச சபை உறுப்பினர் பொன்னம்பலம் இராஜேந்திரம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நேற்று (16) யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினரான இராஜேந்திரம், கட்சியின் நிலைப்பாட்டுக்கு மாறாக, சபை அமர்வில் நடந்து கொண்டார் என்று, தமிழரசுக் கட்சியால் குற்றம் சாட்டப்பட்டது.
விடுக்கப்பட்ட அறிவித்தல்
அதற்காக அவரிடம் விளக்கம் கோரியும், அவரைக் கட்சியிலிருந்து இடைநிறுத்தியும் கட்சியின் பொதுச்செயலாளரால் அவருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டது.
இந்தநிலையில் கட்சியின் முடிவை இரத்துச் செய்து உத்தரவிடக் கோரியும், அந்த முடிவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வலியுறுத்தியும், இதுபோன்ற கட்சியின் இடைநிறுத்தல் முடிவுகளைப் பகிரங்கப்படுத்தக் கூடாது என்ற வழிகாட்டுதல் பணிப்புரையை வழங்குமாறும், யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில், இராஜேந்திரம் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அத்துடன் பிரதேச சபைத் தவிசாளர், உப தவிசாளர் தேர்வு தொடர்பான கட்சியின் நிலைப்பாடு தமக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை என்றும், மனுதாரரான அவர் தமது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
வழக்கு விசாரணை
இந்த நிலையில், நேற்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, மனுதாரரிடம் விளக்கம் கோரி தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுப்பிய கடிதத்தில், அந்த விடயம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது என்பதை நீதிமன்றம் தமது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், வழக்கின் பிரதிவாதிகளான இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் (C. V. K. Sivagnanam), கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) ஆகியோருக்கு அறிவித்தல் அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் இந்த வழக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 6ஆம் திகதிக்கு, நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


