ஆட்சி அமைக்க தயாராகும் தமிழரசுக் கட்சி...! சுமந்திரன் மற்றும் சித்தார்த்தன் அவசர சந்திப்பு
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தலைவர்களுடன் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சந்தித்து கலந்துரையாடினார்.
குறித்த சந்திப்பு இன்று காலை யாழ்ப்பாணம் (Jaffna) - கந்தரோடையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனின் இல்லத்தில் நடைபெற்றது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், மு.சந்திரகுமார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாகவும் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
தமிழரசுக் கட்சி முன்னிலை
இதேவேளை, 35க்கும் குறையாத உள்ளூராட்சி சபைகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. அச்சபைகளில் எல்லாம் மேயர், நகர பிதா, தவிசாளர் பதவிகளைப் பெறுவதற்கு தமிழரசுக் கட்சி முழுமூச்சாக முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நேற்று சனிக்கிழமை மாலை வவுனியாவில் நடைபெற்ற கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில் இவ்வாறான முடிவு எட்டப்பட்டது எனத் தெரியவந்தது.
அத்தகைய முன்னிலை பெற்ற ஒவ்வொரு சபையிலும் தலைமைப் பதவியைப் பெறுவதற்கு கட்சி முயற்சிக்க வேண்டும் என்றும், இது தொடர்பில் ஏனைய தமிழ் பேசும் கட்சிகளோடு ஆதரவு கேட்டு தொடர்பாடல் மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
குறிப்பாக கிழக்கில் தமிழ் பேசும் கட்சிகள் என்ற முறையில் முஸ்லிம்களின் கட்சிகளோடும் ஆதரவு கேட்டு பேச்சு நடத்துவது குறித்தும் மேற்படி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது எனவும் அறியவந்தது.
