குட்டித்தீவில் தொல்லை கொடுக்கும் ஆடுகள் : விழி பிதுங்கி நிற்கும் மக்கள்
இத்தாலி நாட்டில் உள்ள குட்டித்தீவுதான் அலிக்குடித் தீவு (Alicudi)இந்த தீவில் வசிப்பவர்களின் எண்ணிக்கையோ வெறும் 100 பேர் மட்டும்தான்.ஆனால் அந்த தீவில் உள்ள ஆடுகளின் எண்ணிக்கை 600 ஆகும்.
இதனால் அந்த ஆடுகளால் மக்கள் நாளாந்தம் பெரும் தொல்லையை அனுபவிப்பதாக தெரிவிக்கின்றனர்.
ஆடுகளால் தொல்லை
இந்த தீவுக்கு சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விவசாயி ஆடுகள் சிலவற்றைக் கொண்டுவந்தார். இந்த தீவில் ஆடுகளை எவரும் தனிப்பட்ட முறையில் வளர்க்கவில்லை என்றாலும், பொது இடங்களில், வீதிகளில், பூங்காக்களில் என பார்க்கும் இடமெல்லாம் உள்ள மரம், செடி, கொடிகளை தானாக தின்றுவிட்டு பெரும் தொல்லை கொடுத்து திரிந்துக்கொண்டிருக்கின்றன.
அதை எப்படிக் கட்டுப்படுத்துவது எனத் தெரியாமல் அந்தத் தீவு மக்கள் பெரும் சிரமத்தை எதிர்க்கொண்டு வருகின்றனர்.
ஆடுகளை குறைக்க மேயரின் அதிரடி அறிவிப்பு
இந்த நிலையில், அலிகுடித் தீவின் மேயர் ரிக்கார்டோ குல்லோ, ஒரு யோசனையை அறிவித்து செயல்படுத்தத் தொடங்கியிருக்கிறார். அதாவது, அலிகுடி தீவு அல்லாத மற்றப் பகுதியில் இருக்கும் பொதுமக்களுக்கு ஒரு பொது அறிவிப்பை வெளியிட்டார்.
அதில், ``உங்களிடம் ஆடுகளை எடுத்துச் செல்ல ஒரு படகு இருந்தால் போதும், யார் வேண்டுமானாலும் ஆடுகளை தத்தெடுத்துக்கொள்ளலாம். உங்களுக்கு ஆடு வளர்க்கத் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
வந்து குவியும் மெயில்கள்
இது தொடர்பாக அவர் பேசும்போது, ``ஆடு தத்தெடுப்பது தொடர்பாக அறிவிப்பு வெளியானதிலிருந்து பல்வேறு மெயில்கள் வந்துகொண்டிருக்கிறது. ஆடுகளை தத்தெடுப்பவர் என்ன காரணத்துக்காக தத்தெடுக்கிறார் என்பதை மட்டும் விசாரித்து வருகிறோம்.
ஆடுகளை இறைச்சிக்காக கொடுப்பதில் ஈடுபாடு இல்லை. இதற்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 10-ம் தேதி வரை வரவேற்கப்படுகிறது. இந்த புதுமையான திட்டம் புதிய ஆடு உரிமையாளர்களுக்கு ஒரு மதிப்புமிக்க வளத்தை வழங்கும் அதே வேளை, அலிகுடியின் ஆடு சிக்கலைத் தீர்ப்பதை நோக்கமாக வைத்திருக்கிறோம்" எனத் தெரிவித்திருக்கிறார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |