கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட யாழ் இளைஞன்!
சட்டவிரோதமான முறையில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் மூலம் பிரான்சிற்கு (France) தப்பிச் செல்ல முயன்ற யாழ் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் (Bandaranaike International Airport) , குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் (Department of Immigration and Emigration) எல்லை நடைமுறைப்படுத்தல் பிரிவு அதிகாரிகள் குழுவினால் நேற்று (02) இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் (Jaffna), உடுவில் பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 36 வயதுடைய குறித்த இளைஞன் நேற்று (02) மாலை 06.50 மணியளவில் கைதாகியுள்ளார்.
போலி கடவுச்சீட்டு
குறித்த இளைஞன் வர்த்தக வகுப்பு வசதிகளை பயன்படுத்தி சிறிலங்கன் எயார்லைன்ஸ் (Sri Lankan Airlines) விமானம் மூலம் டோஹாவிற்கு (Doha) செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.
இதன்போது, அங்கிருந்த குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் இந்த இளைஞனின் கடவுச்சீட்டை சோதனையிட்டு பார்த்த போது குறித்த கடவுச்சீட்டு போலியானது என தெரியவந்துள்ளது.
மேலும், இளைஞனின் பயணப் பையில் இருந்த இத்தாலிய கடவுச்சீட்டில் பல போலி முத்திரைகள் பயன்படுத்தப்பட்டுள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இதனையடுத்து, கைதுசெய்யப்பட்ட இளைஞன் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மேலும், குறித்த இளைஞனை இன்று (03) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |