யாழ்ப்பாணம் -காரைக்கால் படகுசேவை -திடீரென ஒத்திவைப்பு
யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கும் இந்தியாவின் காரைக்காலுக்கும் இடையில் ஏப்ரல் 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த பயணிகள் படகு சேவை இந்தியாவின் வேண்டுகோளின் பேரில் மே 15 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த படகு சேவையை பராமரிக்க குடிவரவு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளை பணியமர்த்துவதற்கு தேவையான கட்டடங்கள் மற்றும் இதர உபகரண வசதிகளை வழங்க மேலதிக கால அவகாசம் தேவைப்படுவதால் படகு பயணத்தை மே 15ம் திகதி வரை ஒத்திவைக்க வேண்டும் என இந்தியா அறிவித்துள்ளது.
படகு பயணத்தில் ஏற்படவுள்ள நன்மை
இந்த படகு சேவை ஒரு தனியார் நிறுவனத்தால் நடத்தப்படவுள்ளது. மற்றும் ஒரு பயணத்திற்கு US$50 வசூலிக்கப்படுகிறது, அனைத்து வரி விலக்குகளும் உண்டு. ஒரு பயணி 100 கிலோ எடையை கொண்டுவர முடியும்.
ஒரு படகுப் பயணத்தில் 120 முதல் 150 பயணிகள் வரை பயணிக்கலாம் மற்றும் ஞாயிறு தவிர வாரத்தின் ஆறு நாட்களிலும் படகுப் பயணம் நடைபெறும்
ஒரு பயணம் நான்கு மணி நேரம் ஆகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
