பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி : கேள்வியெழுப்பிய சிறீதரன்
பலாலியில் உள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில், புதிய முனையக்கட்டடம் கட்டப்படவுள்ளதுடன், ஓடுபாதை விரிவாக்கம் செய்யும் திட்டமும் பரிசீலனையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முனையத்திற்கான ஒப்பந்ததாரரைத் தேர்ந்தெடுப்பதற்கான கேள்விப்பத்திர செயல்முறையை அரசாங்கம் தொடங்கியுள்ளது என்று, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவான் கொடித்துவக்கு (Janitha Ruwan Kodithuwakku) தெரிவித்துள்ளார்.
600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இந்த திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாகவும் இதற்கென காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றாலும், முனையத்தை இரண்டு ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்க முடியும் என்றும், பிரதி அமைச்சர் ஜனித ருவான் கொடித்துவக்கு நம்பிக்கை தெரிவித்தார்.
முன்மொழியப்பட்ட ஓடுபாதை நீடிப்பு ஆரம்ப கட்டத்தில் உள்ளதாகவும், சாத்திய ஆய்வு நிலுவையில் உள்ளதாகவும், இன்னும் எந்த கொள்முதலும் தொடங்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையம் குறித்த முந்தைய நிர்வாகத்தின் அணுகுமுறையைப் போலல்லாமல், பலாலி விமான நிலையம் அரசாங்கக் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்றும் அமைச்சர் ஜனித ருவான் கொடித்துவக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.
இதேவேளை பலாலி விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்தி காலம் தாழ்த்தப்படுவதற்கான காரணம் குறித்து இன்றைய (20) நாடாளுமன்ற அமர்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S.Shritharan) கேள்வியெழுப்பியுள்ளார்.
அத்துடன் குறித்த விமான நிலையத்தை அபிருத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் பின்வரும் விடயங்களின் ஊடாக சுட்டிக்காட்டினார்.
இரண்டாம் உலகப்போரின் போது பிரித்தானிய வான்படையின் பயனக்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட இலங்கையின் இரண்டாவது பன்னாட்டு விமான நிலையமான யாழ்ப்பாணம் - பலாலி விமான சர்வதேச விமான நிலையம் வடக்கு கிழக்கின் அடையாளமாக பார்க்கப்படுகின்றது.
விமான நிலையம் ஊடாகவே எயார் சிலோன் நிறுவனத்தினுடைய முதலாவது விமான பயணம் இரத்மலானையில் இருந்து சென்னைக்கு நடத்தப்பட்டது. அதன்பின்னர் பலாலி விமான நிலையத்திலிருந்து சென்னை, திருச்சி, மதுரை ஆகிய தென்னிந்திய நகரங்களுக்கும் கொழும்பிற்கும் விமான சேவை ஆரரம்பிக்கப்பட்டு போர்க்கால சூழலில் பயணிகள் சேவை மட்டுப்படுத்தப்பட்டது.
போருக்கு பின்னர் இந்திய அரசின் நிதியுதவியில் முதற்கட்ட அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டு தற்போது இவ்விமான நிலையம் மீளியக்கப்பட்டு வருகின்ற போதும் தற்போது பயன்பாட்டிலுள்ள விமான ஓடுபாதையை மேலும் ஒரு கிலோ மீற்றர் நீளத்திற்கு விரிவாக்கும் பட்சத்தில் ய 320 ரக விமானம் உள்ளிட்ட ஆகக்குறைந்தது 180 பயணிகளை ஏற்றக்கூடிய விமானங்கள் பலாலி விமான நிலையத்துக்கு நேரடியாக வந்து தரையிறங்கும் நிலையை உருவாக்குதல்.
அதன்மூலம் புலம்பெயர்ந்தோரும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் இந்த விமான நிலையம் ஊடாக வருகை தரும் வாய்ப்புக்களை அதிகரிக்க முடியும்.
குறிப்பாக பெரிய ரக விமானங்கள் செயற்படத் தொடங்கினால் பயணிகள் கொண்டுவரக்கூடிய பொதிகளின் அளவும் 15 கிலோவில் இருந்து 30 கிலோவாக அதிகரிக்கப்படும். இதனால் வடக்கு கிழக்கிற்கு வருகைதரும் வெளிநாட்டவர்களின் தெரிவாக பலாலி விமான நிலையம் முன்னுரிமை பெறும்.
இதன்மூலம் வடக்கு கிழக்கு மாகாணங்கள் வளர்ச்சியடைவதுடன் நாட்டின் வருமானமும் அதிகரிக்கப்படும். அத்துடன் வடக்கு கிழக்கிலுள்ள வரலாற்று தொன்மை மிகு ஆலயங்களை தரிசிக்க பெருமளவு இந்திய சுற்றுலாப் பயணிகளும் வருகை தருவதற்கான வாய்ப்புக்களும் அதிகரிக்கப்படும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பெரிய சப்பரம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்
