வடக்கில் ஆயுதம் ஏந்திய காலத்திலும் விளையாட்டை ரசித்த போராளிகள்! அநுர வெளிப்படை
1996 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி நடந்த நாட்களிலே போராளிகளும் ஆயுதங்களை கீழே வைத்து போட்டிகளை பார்வையிட்டார்கள் என்பதை கேள்விப்பட்டிருக்கின்றேன் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் (Jaffna) மண்டைதீவில் நிர்மாணிக்கப்படும் யாழ் சர்வதேச கிரிக்கட் மைதானத்தின் நிர்மாணப்பணிகளை இன்று (01) பிற்பகல் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறுகையில், கிரிக்கெட் என்பது இலங்கையின் பெருமையை உலகிற்கு எடுத்துச் சென்ற ஒரு விளையாட்டு என்று தெரிவித்துள்ளார்.
அனைத்து இன மக்களும் ஒரே அரங்கில்
விளையாட்டு அனைத்து தடைகளையும் வேறுபாடுகளையும் கடந்து மக்களை ஒன்றிணைக்கும் என்பதை வலியுறுத்திய ஜனாதிபதி, இன்று நிர்மாணிப் பணிகள் தொடங்கும் யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானம் வெறும் ஒரு மைதானம் மட்டுமல்ல, நாட்டில் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு வாய்ப்பாகும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்காலத்தில் சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தேசிய கிரிக்கெட் அணியையும், அனைத்து இன மக்களும் ஒரே அரங்கில் ஆரவாரம் செய்யும் ஒரு நாட்டையும் உருவாக்குவதே தனது கனவு என்று கூறிய ஜனாதிபதி, அதை நனவாக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த ஆண்டு இறுதிக்குள், யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் முதல் கிரிக்கெட் போட்டி நடைபெறும் என்றும், முதல் சர்வதேச போட்டி 03 ஆண்டுகளுக்குள் நடைபெறும் என்று நம்பிக்கை தெரிவித்தத ஜனாதிபதி, விளையாட்டில் ஒரு திருப்புமுனையைக் குறிக்கும் வகையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் எடுத்த இந்த நடவடிக்கையை பாராட்டி அதற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

