யாழ். காங்கேசன்துறை துறைமுக விஸ்தரிப்பு: அமைச்சர் வெளியிட்ட தகவல்
காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பாக மாற்று யோசனைகளை இந்தியாவிடம் முன்வைத்துள்ளதாக என துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அருண கருணாதிலக (Anura Karunathilaka) தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதமளவில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (24) திங்கட்கிழமை இடம்பெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சு, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும்போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
வெற்றி பெறவில்லை
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, யாழ்ப்பாணம் காங்கேசன்துறை முகத்தை அபிவிருத்தி செய்வது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச மற்றும் தேசிய மட்டத்திலான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பதற்கு கடந்த காலங்களில் பல பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.
இருப்பினும் ஒரு சில காரணிகளால் அந்த பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறவில்லை.
காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பில் மாற்று யோசனைகளை நாங்கள் இந்தியாவிடம் முன்வைத்துள்ளோம்.
2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதமளவில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளோம்.
இலங்கை - இந்தியா கூட்டு
இலங்கை - இந்தியா கூட்டுத்தன்மையுடன் இந்த அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பது குறித்து இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய இந்தியா ஆரம்பத்தில் கடன் வழங்கவே இணக்கம் தெரிவித்திருந்தது.
ஆனால் தற்போது 63.15 மில்லியன் டொலரை நிவாரணமாக வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது. இந்த அபிவிருத்தி பணிகள் எதிர்வரும் ஆண்டு முன்னெடுக்கப்படும் என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |