இந்திய அமைதிகாக்கும் படையணியாக களமிறங்கி தமிழர் தாயகத்தில் அரங்கேற்றிய படுகொலை!
யாழ்ப்பாணம் கொக்குவில் - பிரம்படி படுகொலையின் 35 ஆவது நினைவேந்தல் இன்று நினைவு கூரப்பட்டுள்ளது.
இந்திய மற்றும் சிறிலங்கா இராணுவத்தினரால் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு இதுவரை நீதிகிடைக்காத நிலையில் தமிழ் சமுகம் வாழ்ந்து வருவதாகவும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சிறிலங்கா - இந்திய உடன்படிக்கையின் கீழ் 1987 ஆம் ஆண்டு தமிழர் தாயகப் பகுதிகளில் தரையிறங்கிய இந்திய படையினர் பல்வேறு மனித உரிமை மீறல்கள் மற்றும் படுகொலைகளை அரங்கேற்றியிருந்தனர்.
இந்திய அமைதிகாக்கும் படை
இந்த படுகொலைகளில் முதலாவதாக 1987 ஆம் ஆண்டு ஓக்டோபர் மாதம் 11 ஆம் மற்றும் 12 ஆம் திகதிகளில் கொக்குவில் பிரம்படியில் 50க்கு மேற்பட்ட பொது மக்கள் துப்பாக்கியால் சுட்டும் கவச வாகனங்களை கொண்டு வீதியில் நசுக்கியும் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
அமைதிகாக்கும் படையாக தமிழர் தாயகத்தில் நிலைகொண்டிருந்த இந்திய இராணுவத்தினர் மேற்கொண்ட முதலாவது தமிழ் இனப்படுகொலை சம்பவமாக பிரம்படி படுகொலை பதிவாகியிருந்தது.
இந்த படுகொலையில் உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் நிகழ்வு இன்று உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது. படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக பிரம்படி சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபி முன்னால் இன்று காலை இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
மக்கள் அஞ்சலி
நினைவு தூபிக்கு மலர்மாலை அணிவித்து ஈகை சுடர் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த அஞ்சலி நிகழ்வில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகளுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க மக்கள் பிரதிநிதிகள் தவறியுள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
