யாழ்.குடாநாட்டு கடற்தொழிலாளர்களின் போராட்டத்தை முடக்கும் முயற்சி? பெறப்பட்டது தடையுத்தரவு!
யாழ்.கடற்தொழிலாளர்களின் போராட்டத்திற்கு எதிராக பருத்தித்துறை நீதிமன்றத்தில் காவல்துறையினரால் தடையுத்தரவு பெறப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய இழுவைப் படகுகளை அனுமதிக்க கூடாது என்றும், உயிரிழந்த இரண்டு கடற்தொழிலாளர்களுக்கு நீதி கோரியும், அமைச்சர் இதற்கான நடவடிக்கையை எழுத்து மூலம் வழங்க வேண்டும் என்று கோரியும் போராட்டங்கள் குடாநாடெங்கும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அந்த வகையில், யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் கடற்தொழிலாளர்களினால் இப்போராட்டம் வீரியம் பெற்றிருந்தது. எனினும் அமைச்சருடனான கலந்துரையாடல்களின் போது அமைச்சர் எழுத்து மூலமான உத்தரவாதத்தை வழங்க மறுத்ததையடுத்து போராட்டம் மேலும் விரிவடைந்தது.
இந்த நிலையில், நாட்டில் கொவிட் தொற்று தீவிரமடைவதைக் காரணம் காட்டியும், உயர் தரப் பரீட்சையினை தொடர்படுத்தியும், பருத்தித்துறை நீதிமன்றத்தில் காவல்துறையினரால் தடையுத்தரவு பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
