யாழ். போதனா வைத்தியசாலையில் நோயாளியிடம் திருடிய நபர்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ( Teaching Hospital Jaffna) நோயாளி ஒருவரிடம் பொருட்களை களவாடிச் சென்ற நபர் ஒருவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த திருட்டுச் சம்பவமானது நேற்று (21) மதியம் பார்வையாளர் நேரத்தில் நூதனமான முறையில் இடம்பெற்றுள்ளது.
திருட்டுச் சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த நபர், நோயாளி ஒருவரிடம் நூதனமான முறையில் எக்ஸ் கதிர் படம்(X Ray) எடுக்க போக வேண்டும் எனவும் நீங்கள் உணவருந்தி குளித்து விட்டு ஆயத்தமாக இருங்கள் என்றும் கூறி அவரை எக்ஸ் கதிர்ப்படம்(X Ray) எடுக்கும் இடத்திற்கு கூட்டிச் சென்று நோயாளி அணிந்திருந்த மோதிரம், சிறுதொகைப் பணம் மற்றும் கைப்பை போன்றவற்றை திருடிச் சென்றுள்ளார்.
பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்
இதேவேளை, இந்த திருட்டு சம்பவமானது வைத்தியசாலை சிசிரிவி (CCTV) இல் பதிவாகியுள்ளதுடன் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சந்தேக நபர் பற்றிய விபரங்கள் தெரிந்தவர்கள் யாழ். காவல்நிலையத்திற்கோ அல்லது வைத்தியசாலை பணிப்பாளர் காரியாலயத்திற்கோ தெரியப்படுத்துமாறு வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன், வைத்தியசாலைக்கு அனுமதிக்கும் நோயாளிகள் தங்க ஆபரணங்களையோ பெறுமதியான பொருட்களையோ கொண்டு வரவேண்டாம் எனவும் தெரியாத நபர்களுடன் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |