யாழ்ப்பாணத்தில் தொடரும் காவல்துறையின் அராஜகம் : பறிபோகும் தமிழ் இளைஞர்களின் உயிர்கள்
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் தமிழ் இளைஞர் ஒருவர் திருட்டு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சட்டத்தை கையில் எடுத்த காவல்துறையினர் அந்த இளைஞனை மிருகத்தனமாக தாக்கி கொன்றுள்ளனர். அதற்கு ஆதாரமாக மருத்துவ பரிசோதனை அறிக்கையும் வெளிவந்துள்ளது.
சித்திரவதையை எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. வட்டுகோட்டையில் காவல்துறை சித்தரவதைக்கு பலியான இளைஞனுக்கு நீதிவேண்டும். மிக மோசமாக அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து சிறுநீரகம் செயலிழக்கும் வரை தாக்கியோருக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் சகலர் மீதும் பாரபட்சமற்ற வகையில் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மனிதாபிமானத்தை நேசிக்கும் மக்கள் யாவரும் இதற்காக குரல் கொடுக்க போராட முன்வர வேண்டும். இது தொடர்பாக சமூக ஊடக நண்பர்களின் பதிவுகளிலிருந்து நெஞ்சை பிழியும் சம்பவ விபரணம்,
சாப்பாடு கொடுக்காமல் சாராயம் கொடுத்து தலைகீழாக கட்டி அடித்தார்கள்!
வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த நாகராசா அலெக்ஸ் என்ற இளைஞன் சிறைச்சாலையில் இருந்து யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை உயிரிழந்தார்.
நகை திருட்டு சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்டவர் என்ற ரீதியில் அவரை கைது செய்து கொண்டு சென்ற வட்டுக்கோட்டை காவல்துறையினர் பல சித்திரவதைகளை காவல் நிலையத்தில் வைத்து செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் அவரை முற்படுத்தியவேளை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
அதன்பின்னர் குறித்த இளைஞனின் உடல்நிலை மோசமாக இருந்ததால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதன்பின்னர் அவர் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் மீண்டும் அவருக்கு உடல் சுகயீனம் ஏற்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
உயிரிழந்த இளைஞனின் மரண வாக்குமூலம்!
அந்த இளைஞன் உயிரிழக்க முன்னர் கூறுகையில், வட்டுக்கோட்டை காவல்துறையினர் களவு சம்பவம் குறித்து சந்தேகத்தின் பேரில் கொண்டு சென்று கட்டித் தூக்கி விட்டு அடித்தார்கள். தண்ணி போட்டுவிட்டு, முகத்திற்கு துணியை கட்டி விட்டு தண்ணீர் ஊற்றி ஊற்றி அடித்தார்கள். தொண்டையால் சாப்பாடு இறங்குதில்லை. கொஞ்சமாக தான் சாப்பிட முடிகிறது. சாப்பாட்டிற்கு மனமே இல்லாமல் உள்ளது.
இரண்டு கைகளும் தூக்க முடியாமல் உள்ளது
பின்னர் நிலத்தில் இருந்து இரண்டு முழம் உயரத்தில் தலைகீழாக கட்டித் தூக்கிவிட்டு, கையை பின்பக்கமாக கட்டிவிட்டு கேட்டு கேட்டு கொடூரமாக தாக்கினார்கள். நான் களவு எடுக்கவில்லை என்று கூறினேன். பின்னர் பெட்ரோல் பையினுள் போட்டுவிட்டு தாக்கினார்கள். நான் மயங்கிவிட்டேன். இரண்டு கைகளும் தூக்க முடியாமல் உள்ளது.
காவல் நிலையத்தில் முதல்நாள் சாப்பாடு தரவில்லை. அடுத்தநாள் சாப்பாடு தந்துவிட்டு அவர்களது அறைக்குள் அழைத்துச் சென்று, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு போடக்கூடாது, யாருக்கும் சொல்லக்கூடாது என்று மிரட்டினார்கள். பின்னர் அடுத்த நாளும் பயமுறுத்தினார்கள். சாராயம் தந்து குடிக்குமாறு கூறினார்கள் என்றார்.
இதுதான் முதற்தடவையல்ல.
யாழ்ப்பாணத்தில் காவல்துறையினரால் தமிழ் இளைஞன் அடித்து கொல்லப்படுவது இதுதான் முதற்தடவையல்ல.
கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் திகதி, ஐந்து இளைஞர்கள் மீது திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்டு சுன்னாகம் காவல்துறையினர் கைது செய்து இருந்தனர்.
இதன்போது அவர்களில் ஒருவரான சுமணன் எனும் இளைஞர் காவல்துறையின் கொடூர தாக்குதலில் உயிரிழந்தார்.அத்துடன் உயிரிழந்தவரை கிளிநொச்சி இரணைமடு குளத்தில் வீசிவிட்டு அவர் தற்கொலை செய்ததாகவும் நாடகமாடியுள்ளனர்.
இந்த தகவலை அந்த இளைஞனுடன் கைது செய்த ஏனைய நான்கு இளைஞர்களும் நீதிமன்றில் தெரிவித்த போதே விடயம் அம்பலத்திற்கு வந்தது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள்
அதேபோன்று யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் கடந்த 2016ஆம் ஆண்டு ஒக்ரோபர் 20ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் காவல்துறையின் துப்பாக்கிசூட்டில் உயிரிழந்தனர்.
இதனையும் காவல்துறையினர் விபத்து என நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்தனர்.
இவ்வாறு தமிழ் மக்களின் உயிர்கள் என்றால் சிறிலங்காவின் இராணுவம் மற்றும் காவல்துறைக்கு அலாதி பிரியம். சட்டத்தை இவர்கள் கையில் எடுத்தால் நீதிமன்றம் எதற்கு.இது என்ன யுத்தகாலமா கைது செய்தவரை மறைத்து வைப்பதற்கு.
இனியென்ன கொலை செய்தவர்களுக்கு இடமாற்றம்.யாராவது புதிதாக அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டால் கொலையாளிகளுக்கு விடுதலை. இதுதானே சிறிலங்காவின் ஜனநாயக ஆட்சி..!