யாழ்ப்பாணத்தை ஆக்கிரமிக்கும் வன ஜீவராசிகள் திணைக்களம்: போராட்டத்தில் குதித்த மக்கள் (படங்கள்)
யாழ்ப்பாணம் அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோரப் பிரதேசத்தையும் பொன்னாலை துருத்திப்பிட்டியையும் சுவீகரிப்பதற்கு வன ஜீவராசிகள் திணைக்களம் எடுத்துள்ள முயற்சியை கைவிட வலியுறுத்தி போரட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
பொன்னாலை சந்தியில் இன்று காலை இடம்பெற்ற இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தில் கடற்றொழிலாளர்களும் பொதுமக்களும் பங்கெடுத்துள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் சங்கானை பிரதேச செயலாளர் பிரிவை மையமாக கொண்டு அராலி முதல் பொன்னாலை வரையான கரையோர பகுதியை வனவளப் பாதுகாப்பு திணைக்களத்தின் வளப்பிரதேசமாக ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட செயலாளரால் சங்கானை பிரதேச செயலாளருக்கு அண்மையில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வனவளப் பிரதேசமாக ஒதுக்கீடு
எனினும் ஏறக்குறை 10 கிலோமீற்றர் நீளமான இந்தப் பகுதியில் ஏறக்குறைய 354 ஏக்கர் சுவீகரிக்கப்படவுள்ளதுடன், இதில் 07 மயானங்கள், விளையாட்டுத் திடல்கள், தனியார் காணிகள் மற்றும் விவசாய நிலங்கள் என பொதுமக்கள் பயன்படுத்தும் பகுதிகள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த பகுதியை வனவளப் பிரதேசமாக ஒதுக்கீடு செய்வதற்கு எதிராக இன்று பொன்னாலை சந்தியில் கவனயீர்ப்பு போராட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.
இதன் போது எமது கடல் எமக்கு வேண்டும், எமது நிலம் எமக்கு வேண்டும், கடலைச் சுவீகரித்து கடற்தொழிலாளர்களை பட்டினிச்சாவிற்குள் தள்ளாதே, எமது கடலை சுவீகரிக்க எவருக்கும் அனுமதியில்லை, ரணில் அரசே எமது கடல் வளத்தை சுவீகரித்து வரலாற்று தவறைச் செய்யாதே, மேச்சல் தரையையும் மயானங்களையும் மாட்டு வண்டி சவாரித் திடல்களையும் சுவீகரிக்கும் திட்டத்தை உடனே கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏந்தியிருந்தனர்.
இந்தப் போராட்டத்தில் பொன்னாலை தொடக்கம் அராலி வரையுள்ள கடற்றொழிலாளர்கள், அரசியல் கட்சிகளின் சார்பில் சட்டத்தரணி க.சுகாஸ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |