வழமைக்கு திரும்பும் யாழ் போதனா வைத்தியசாலையின் சேவைகள்
புதிய இணைப்பு
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற பணிப்பகிஷ்கரிப்பை பொதுமக்கள் நலன் கருதி மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தளர்த்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவசர சிகிச்சை தவிர்ந்த ஏனைய சிகிச்சைகளை இடைநிறுத்தி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் வியாழக்கிழமை முதல் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
இந்த நிலையில் அரச வைத்திய அதிகாரிகளின் தாய்ச் சங்கத்துடன் யாழ் போதனா வைத்தியசாலைக் கிளைச் சங்கம் தற்போதைய நிலைமை பற்றிக் கலந்துரையாடிய பின்னர், நேற்றுக் காலை பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
பணிப்பாளருக்கு கடிதம்
அதில் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பாக பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன என தெரிவித்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளருக்கு நேற்று (28) கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில், “யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகம், வைத்தியசாலை மட்டத்தில் நடாத்தப்பட்ட உள்ளக விசாரணைக் குழுவின் பரிந்துரையின்படி இப்பிரிவின் (ATICU விபத்து அதிதீவிர கண்காணிப்புப் பிரிவு) சுமூக நிலை கருதி ,பொறுப்புத் தாதிய உத்தியோகத்தராக நியமிக்கபட்டிருந்த தாதியை வேறு பிரிவிக்கு இதுவரை காலமும் மாற்றாமல், விபத்து அதிதீவிர கண்காணிப்புப்பிரிவில் (ATICU) சிகிச்சை பெறுவதற்கான நோயாளிகளின் உரிமைகள் மறுக்கப்படுவதனை எமது சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
பொதுமக்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு விபத்து அதிதீவிரக் கண்காணிப்புப் பிரிவு (ATICU) நோயாளிகளுக்கு பாதுகாப்பான மற்றும் நல்ல நிர்வாகத்துடன் கூடிய அதி தீவிர சிகிச்சைப் பிரிவினை நிறுவுவதற்காக எமது தொழிற்சங்க நடவடிக்கையை விபத்து அதிதீவிர கண்காணிப்பு பிரிவிற்கு மட்டும் மட்டுப்படுத்திக் குறைக்கிறோம்.
இதன் காரணமாக ATICU இலிருந்து, சத்திர சிகிச்சை அதிதீவிர கண் காணிப்பு பிரிவுக்கு (SICU) நோயாளிகளை மாற்றும் போது SICUவில் கட்டில்கள் கிடைப்பதற்கு வசதியாக புற்றுநோய் அறுவை சிகிச்சை மற்றும் குறிப்பிட்ட விபத்து அறுவை சிகிச்சைகள் தவிர ஏனைய வழக்கமான சத்திர சிகிச்சைகள் இடம்பெறாது.
தொழிற்சங்க நடவடிக்கை
தற்போதைய பொறுப்புத் தாதிய உத்தியோகத்தர் ATICU பணியில் இருக்கும் வரை ATICU இல் புதிய நோயாளர்களின் அனுமதிகளை மருத்துவர்கள் பொறுப்பேற்க மாட்டார்கள்.
ATICU இல் உள்ள நோயாளிகள் மருத்துவ விடுதிகள் அல்லது SICUக்கு மாற்றப்பட்டதும் ATICU இல் கடமையில் உள்ள வைத்தியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையாக அங்கிருந்து பணிப்பாளர் பணிமனைக்கு இடமாற்றப்படுவார்கள்.
எனவே அவர்களை வைத்தியசாலையில் உள்ள ஏனைய அதிதீவிர சிகிச்சை கண்காணிப்புப் பிரிவுகளுக்கு மாற்றுமாறு பணிப்பாளரிடம் கோரிக்கை வைக்கப்படும். சிறந்த நிர்வாகத்துடன் கூடிய நோயாளிகளுக்குப் பாதுகாப்பான ATICUஐ உருவாக்குவதற்கு நாங்கள் துணை நிற்போம்.
கிளினிக்குகள், வெளி நோயாளர் பிரிவு மற்றும் பிற சேவைகள் இன்று மாலை 4 மணி முதல் வழக்கம் போல் செயற்படும்.
அவசர சிகிச்சைப் பிரிவுகளில் நோயாளிகளின் பாதுகாப்பை முன்னுறுத்தி, கலந்துரையாடலின் போது பணிப்பாளரினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் ஒரு வாரத்திற்குள் நடைமுறைப்படுத்தத் தவறும் பட்சத்தில் முன்னறிவிப்பின்றி முழு அளவில் எமது தொழிற்சங்க நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் (Teaching Hospital Jaffna) கிளினிக் சேவைகள் வழமை போல இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனடிப்படையில், இன்று (01) முதல் சேவைகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தமது தொழிற்சங்க நடவடிக்கையை நேற்று (28) இரண்டாவது நாளாகவும் முன்னெடுத்து வந்தனர்.
பாதுகாப்பதற்கான நடவடிக்கை
இதனால் நோயாளர்கள் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்ற நிலையில் நோயாளர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டுமெனவும் பலரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்தநிலையில், வைத்தியசாலை நிர்வாகத்திற்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலில் மக்கள் நலன் கருதி கிளினிக் சேவைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவசர சிகிச்சை தவிர்ந்த ஏனைய சிகிச்சைகளை இடைநிறுத்தி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர், தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.
பல்வேறு பாதிப்பு
இதனால் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் பல்வேறு பாதிப்புக்களுக்கு உள்ளாவதுடன் உரிய சிகிச்சைகளை பெறமுடியாது பெரும் அவதியை எதிர்நோக்கியுள்ளனர்.
வைத்தியர்கள் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்ற தொழிற்சங்க நடவடிக்கையினால் நோயாளர்கள் பெரும் ஆபத்தையும் எதிர்நோக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான நிலைமையில் இப்பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் வைத்தியசாலை நிர்வாகத்திற்கும் வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கும் இடையில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் பகுதியளவில் இணக்கம் ஏற்பட்டாலும் இதுவரை முழுமையான இணக்கம் எட்டப்படவில்லை என அறிய முடிகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 2 நாட்கள் முன்
