யாழ்.போதனாவின் மருத்துவ கழிவுகள் - மாநகர சபையில் முக்கிய சந்திப்பு!
யாழ். போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை உரிய முறையில் அழிப்பதற்காக கழிவகற்றல் பொறிமுறை உருவாக்குவது தொடர்பில் யாழ் மாநகர சபையில் விசேட கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகள் தற்போது தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கே அழிக்கப்படும் நிலையிலேயே புதிய பொறிமுறை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மருத்துவ கழிவுகள்
தற்போது, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகள் தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கே அழிக்கப்படுகின்றன.
எனினும், யாழ்ப்பாண வைத்தியசாலையானது, யாழ்ப்பாண குடா நாட்டில் உள்ள அனைவரது வைத்திய தேவைகளையும் பூர்த்தி செய்கின்ற ஒரு வைத்தியசாலை என்பதனால் அதிகளவு மருத்துவ கழிவுகள் ஒவ்வொரு நாளும் சேகரிக்கப்படுகின்றன.
கலந்துரையாடல்
எனவே அந்த கழிவுகளை யாழ்ப்பாண மாநகரத்துக்குட்பட்ட கோம்பயன் மணல் இந்து மயானப் பகுதியில் பாதுகாப்பான முறையில் பொதுமக்களுக்கு இடைஞ்சல் இல்லாத வகையில் அழிப்பது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
யாழ் மாநகர சபையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இந்த விசேட கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.
மாநகர சபையின் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட், போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, மாநகர சபையின் ஆணையாளர், பொறியியலாளர்கள், உறுப்பினர், தொழில்நுட்பவியலாளர்கள் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.