யாழ் தொழில்நுட்பக் கல்லூரிக்கு உதவ பலர் முன்வருகை
புலம்பெயர் தொழிலதிபரும், சமூக செயற்பாட்டாளருமான பாஸ்கரன் கந்தையா அவர்களுடைய வேண்டுகோளை ஏற்று, கனடாவில் இருக்கும் ஒருவரும், யாழ்ப்பாணத்தில் இருக்கும் ஒருவரும் இணைந்து இன்று யாழ். தொழில்நுட்பக் கல்லூரிக்கு அலுமினிய பிட்டிங் துறைக்கு ஒரு தொகுதி பொருட்களை வழங்கியுள்ளனர்.
கனடாவில் இருக்கும் தாட்சாயினி என்பவர் தான் சார்ந்தவர்களிடம் சிறுகச் சிறுகச் சேர்த்த 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பணத்தையும், கனடாவில் இருந்து தற்போது யாழ்ப்பாணத்திற்கு வந்து தொழில்முயற்சியாளராக இருக்கும் ஜோன்சன் என்பவர் 1 லட்சம் ரூபாவையும் வழங்கி மொத்தமாக 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவுக்கு அலுமினிய பிட்டிங் செய்வதற்கான கருவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
'யாழ். தொழில்நுட்பக் கல்லூரியை புலம்யெர் மக்கள் தமது உதவிகளால் தாங்கி எமது அடுத்த தலைமுறையினரின் அறிவு விருத்திக்கு உதவ முன்வரவேண்டும்' என்று பாஸ்கரன் கந்தையா விடுத்திருந்த வேண்டுகோளைத் தொடர்ந்து, யாழ் தொழில்நுட்பக் கல்லூரிக்கு உதவுவதற்கு பலர் முன்வந்துகொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.