நல்லூர் இராசதானி மரபுரிமை சின்னங்களை பாதுகாப்பது தொடர்பில் நேரில் ஆராய்வு
யாழ்ப்பாணம் மரபுரிமை மையத்தின் ஏற்பாட்டில் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் அழைத்துவரப்பட்டு சங்கிலியன் அரண்மனை, நுழை வாயில், யமுனா ஏரி, மந்திரி மனை ஆகியவற்றை புனரமைப்பது தொடர்பில் நேற்றைய தினம் (07) ஆராயப்பட்டது.
தற்போது இவற்றை செய்து முடிப்பதற்கான பூர்வாங்க பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், விரைவில் இவற்றிற்கான கட்டட வரைபடங்கள் (architectural drawings) தயாரிக்கப்பட்டு வெளிவிடுவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக யாழ். மரபுரிமை மையம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான மரபுரிமைகளை பாதுகாப்பதற்கு தாம் எடுக்கும் முயற்சிகளுக்கு தமிழ் உணர்வாளர்கள் பங்களிப்பை வழங்கவேண்டும் எனவும் குறித்து அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த நேரடி கள ஆய்வில், யாழ். மரபுரிமை மையத்தின் தலைவர் பேராசிரியர் புஷ்பரட்ணம், செயலாளரான மருத்துவ பீட பதிவாளர் ரமேஷ், மாநகர முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணன், புனர்நிர்மாண அலுவலர் கபிலன், மாநகர சபை உறுப்பினர்களான பார்த்திபன், தனுயன் மற்றும் கண்டியில் இருந்து வருகை தந்த பட்டய கட்டட கலைஞர் ஹேரத், அளவை அளவையியலாளர் (quantity surveyor) சரத் சத் குமார, தொல்லியலாளர் மைத்திரிபால, மூத்த புனர்நிர்மாண அலுவலர்களான (senior conservation officers) பண்டாரநாயக்க, மெத்தானந்த ஆகியோர் கலந்து கொண்டனர்.







