ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் : பெறவுள்ள யாழ். பல்கலை மாணவி
ஆயுததாரிகளால் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் இவ் ஆண்டு மாணவி கிரிஜா அருள்பிரகாசத்திற்கு வழங்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் (University of Jaffna) 39 ஆவது பட்டமளிப்பு விழா (19.03.2025) முதல் (22.03.2025) வரையான நான்கு நாட்கள் நடைபெறுகின்றது.
மூன்றாம் நாளான இன்று (21) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கைகள் துறையில் ஊடகவியலில் திறமைச் சித்தி பெற்ற மாணவியான மன்னார் (Mannar) மாவட்டத்தின் விடத்தல் தீவைச் சேர்ந்த சேர்ந்த கிரிஜா அருள்பிரகாசத்திற்கு இப் பதக்கம் வழங்கப்படவுள்ளது.
ஊடகவியலாளர் நிலக்சன்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடக வளங்கள் பயிற்சி மையத்தில் ஊடக மாணவனாகப் படித்துக் கொண்டு ஊடகவியலாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த நிலக்சன் 2007 ஆம் ஆண்டு ஆவணி மாதம் முதலாம் திகதி இராணுவ ஊரடங்கு வேளையில் அதிகாலை ஐந்து மணியளவில் அவரது வீட்டில் வைத்து பெற்றோர் முன்னிலையில் ஆயுததாரிகளால் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
நிலக்சனது ஞாபகார்த்தமாக அவரது பாடசாலை நண்பர்களான யாழ் இந்துக்கல்லூரியின் 2004 உயர்தர மாணவர்களால் முன்னெடுக்கப்படும் “நிலா நிதியம்” யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் போது ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் தங்கப்பதக்கத்தை சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்தமாக வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.
இந்நிதியத்தின் அங்குரார்ப்பண சான்றிதழ் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலக்சனின் பத்தாம் ஆண்டு நினைவேந்தலின் போது யாழ் பல்கலைக்கழக கலைப் பீடாதிபதியிடம் கையளிக்கப்பட்டு பின்னர் யாழ் பல்கலைக்கழகத்திடம் நிதி கையளிக்கப்பட்டது.
இதன்மூலம் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் கடந்த ஆறு ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றது.
கடந்த ஆண்டு இரத்தினபுரி (Ratnapura) மாவட்டத்தில் கொழும்புகாமம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணராஜா செல்வி பெற்றுக் கொண்டிருந்தார்.
பட்டமளிப்பு விழா
யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கத்தினை இவ் ஆண்டு பெற்றுக்கொள்ளும் கிரிஜா அருள்பிரகாசம் தனது கருத்தினை தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், “எனது பெயர் கிரிஜா அருள்பிரகாசம், எனது சொந்த ஊர் மன்னார் மாவட்டத்தில் உள்ள விடத்தல்தீவு எனும் கிராமம்.
நான் எனது ஆரம்பக் கல்வியை விடத்தல்தீவு தூய/ ஜோசவாஸ் மகா வித்தியாலயத்திலும், தொடர்ந்து உள்நாட்டு யுத்த்தினால் ஏற்பட்ட இடப்பெயர்வு காரணமாக வன்னி பிரதேசத்தின் பல பாடசாலைகளிலும் கற்றேன்.
பின்னர் மீள் குடியேற்றத்தைத் தொடர்ந்து இடைநிலை முதல் உயர்தரம் வரையான கல்வியை மன்/ புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில் கற்றேன்.
உயர்தரத்தில் 2A,B சித்தியை பெற்று, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை முதல் தெரிவாக தெரிவு செய்தேன்.
பல்கலைக்கழகத்தில் முதலாம் வருடத்தில் கற்ற மூன்று பாடங்களிலுமிருந்து ஒரு பாடத்தை சிறப்புக் கலைக்காக தெரிவு செய்ய வேண்டும் எனும் போது, ஊடகக் கற்கைகள் மீது கொண்டிருந்த ஆதீத ஆர்வம் என்னை இந்தத் துறை நோக்கி ஈர்த்திருந்தது.
மனமார்ந்த நன்றி
புதிய பாடத்திட்டத்தின் முதல் வகுப்பினராக, இரண்டாம் வருடத்திலிருந்து செயன்முறை ரீதியாகவும், கோட்பாட்டு ரீதியாகவும், செம்மையாக்கம், புலனாய்வு, ஊடகவியல், குறும்படத் தயாரிப்பு, ஆவணப்படத் தயாரிப்பு, இதழியல் என்பன உள்ளடங்கலாக பல்வேறு பாடங்களைக் கற்றுக்கொண்டேன்.
அத்துடன், ஊடகத் துறைசார் அனுபவம் வாய்ந்தவர்களின் கருத்துப் பகிர்வுகள், ஊடகத் தொழில்சார் பயிற்சிகள் மற்றும் ஆளுமை வாய்ந்தவர்களின் விரிவுரைகள் ஆகியன எமக்கான ஊக்கத்தை அளித்தது.
இவை ஊடகத்துறை சார்ந்த எனது அறிவுப்புபுலத்தை மேலும் விஸ்தரிக்க உதவின.
இதழியல் மற்றும் வாசிப்பு மீது கொண்ட ஆர்வத்தினால் ஊடகத் தொழில்சார் பயிற்சிக்காக தினகரன் தேசிய பத்திரிகை நிறுவனத்தைத் தெரிவு செய்து அங்கு தொழில்சார் பயிற்சியையும், ஊடகவியலாளர்களின் அனுபவ அறிவினையும் பெற்று அவர்களுடன் இரண்டு மாதங்கள் பணியாற்றக்கூடிய வாய்ப்பும் ஊடகக் கற்கைகள் துறையினரால் ஏற்படுத்தித் தரப்பட்டு, இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடகக் கற்கைகள் துறையில் தற்காலிக உதவி விரிவுரையாளராகப் பணியாற்றக்கூடிய வாய்ப்பும் கிடைத்தது.
எனது கல்விக்கும் ஏனைய அனைத்து செயற்பாடுகளுக்கும் எப்போது துணையாயிருந்த எனது பெற்றோருக்கும், கற்றலில் மட்டுமின்றி பல வழிகளிலும் எனக்கான வாய்ப்புக்களை உருவாக்கி என்னைச் செதுக்கிய ஊடகக் கற்கைகள் துறையின் துறைத்தலைவர் பூங்குழலி சிறீசங்கீர்த்தனன் மற்றும் விரிவுரையாளர்களான பேராசிரியர் சி. ரகுராம், அனுதர்ஷி கபிலன், யூட் தினேஸ் கொடுதோர் ஆகியோருக்கும், ஊடகக் கற்கைகள் துறையின் ஏனைய பணியாளர்களுக்கும் மற்றும் எனது கல்விக்கு உற்ற துணையாக இருந்த எனது உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் இத்தருணத்தில் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்தமாக வழங்கப்படுகின்ற தங்கப் பதக்கத்தினை எனக்களித்துக் கௌரவித்த நிலா நிதியம் குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்