நினைவு தூபி தொடர்பில் யாழ். பல்கலைக்கழக பேரவை எடுத்த தீர்மானம்! மாணவர்கள் கொடுத்த பதிலடி
யாழ்.பல்கலைகழக வளாகத்தினுள் அமைக்கப்பட்டு வரும் நினைவு தூபி முள்ளிவாய்க்கால் நினைவு தூபியாகவே அமைக்கப்படும் என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உறுதிபட கூறியுள்ளது.
யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி சட்டவிரோதமானது என கூறி பல்கலைக்கழக துணைவேந்தரின் உத்தரவில் கடந்த மாதம் 08ஆம் திகதி இடித்தழிக்கப்பட்டது.
அதனையடுத்து மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டத்துடன் , அரசியல் பிரதிநிதிகள் பொதுமக்கள் மற்றும் பல்கலைக்கழக பழைய மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து 11ஆம் திகதி காலை தூபி மீள அமைப்பதற்கு என துணைவேந்தர் தலைமையில் மாணவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, அடுத்து வந்த நாட்களில் தூபி கட்டுவதற்கான ஆரம்ப கட்ட பணிகள் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை யாழ்.பல்கலைகழகத்தில் நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில் தூபி விவகாரத்தில் நடைபெற்ற விடயங்களை விலாவரியாக குறிப்பிட்டு துணைவேந்தர் சிறிசற்குணராஜா அறிக்கை சமர்ப்பித்தார்.
அதனை தொடர்ந்து தற்போது அமைக்கப்படவுள்ள தூபியினை "அமைதி தூபி" எனும் பெயரில் அமைக்க பேரவை அனுமதியளித்தது.
இது தொடர்பில் மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் நேற்று தெரிவிக்கும் போது, தூபி முள்ளிவாய்க்கால் நினைவு தூபி எனும் பெயரில் முன்னர் இருந்த அமைப்பிலேயே மீள கட்டப்படும்.
அமைதி தூபி எனும் பெயரிலேயோ அல்லது, வேறு வடிவங்களிலேயோ அமைக்க அனுமதிக்க மாட்டோம் என உறுதிபட கூறியுள்ளனர்.
