வலி.வடக்கு காணிகள் விடுவிப்பு - வெளியானது அறிவிப்பு!
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய யாழ்ப்பாணம் வலி. வடக்கு பகுதியில் சிறிலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த 108 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணி விடுவிப்பு
பல ஆண்டு காலமாக இராணுவத்தின் வசமிருந்த குறித்த காணிகள் 2019 ஆம் ஆண்டு விடுவிப்பதாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் நாளைய தினம் இராணுவத்தினரால் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரிடம் காணி பத்திரங்கள் வழங்கி வைத்து விடுவிக்கப்படவுள்ளன.
டக்ளஸ் தலைமையில் நிகழ்வு
நாளை வெள்ளிக்கிழமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், பலாலி அன்ரனிபுரத்தில் நடைபெறும் நிகழ்வின் போது பாதுகாப்பு தரப்பால் காணிகள் கையளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை சுதந்திர தினத்தை முன்னிட்டு இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் பங்கேற்க யாழ்ப்பாண மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
