யாழில் வாள்வெட்டில் முடிந்த வாய்த்தர்க்கம்...! பெண்ணொருவரின் 2 விரல்களைத் துண்டித்த இளைஞர்
யாழில் வாள்வெட்டுச் சம்பவத்தில் பெண்ணொருவரின் இரண்டு விரல்கள் துண்டாக்கப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் நேற்று (02-05-2026) இடம்பெற்றுள்ளது.
வட்டுக்கோட்டை காவல் பிரிவிற்குட்பட்ட முதலியகோவில் பகுதியிலேயே இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் ஏற்கனவே அயல் வீட்டு இளைஞருக்கும் குறித்த பெண்ணின் குடும்பத்துக்கும் இடையே முரண்பாடு காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் நேற்றைய தினம் வேலை முடிந்து வந்தபோது அவரை வழிமறித்து அவரது துவிச்சக்கர வண்டியைக் குறித்த இளைஞன் பறித்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து அவர் தனது மனைவிக்குக் கூறியதையடுத்து அவரது மனைவி குறித்த இளைஞனுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாள்வெட்டுத் தாக்குதல்
இதன்போது குறித்த இளைஞன் அந்தப் பெண் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளார்.
வாள்வெட்டில் படுகாயமடைந்த பெண், நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞனுக்கு ஏற்கனவே பல வழக்குகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |