ஜெய்சங்கர் முன்னிலையில் அம்பலமான தமிழ் தலைமைகளின் பலவீனம்!
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கொழும்புக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது தமிழ் அரசியல் கட்சிகளுடன் ஒரு சந்திப்பை நடத்தி இருந்தார்.
குறித்த சந்திப்பு தமிழ் தேசிய அரசியலில் நிலவும் பாரிய ஓட்டையை மீண்டும் ஒருமுறை உலகிற்கு அம்பலப்படுத்தி இருந்தது.
காரணம், மேற்படி சந்திப்பு தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை இந்தியாவிடம் ஒருமித்து முன்வைப்பதற்கான ஒரு வாய்ப்பாக அமைந்திருக்க வேண்டும்.
அரசியல் தலைமைகள்
இருப்பினும், வழக்கம் போல தமிழ் அரசியல் தலைமைகள் தங்களுக்குள் இருக்கும் தீர்க்கப்படாத முரண்பாடுகளை ஏனைய நாட்டின் முன்னால் பகிரங்கப்படுத்தி, ஒரு பலவீனமான செய்தியைப் பதிவு செய்து இருந்தனர்.
இந்திய அமைச்சர் போன்ற ஒரு உயர்மட்ட இராஜதந்திரியைச் சந்திக்கும் போது, தமிழ் தரப்பு குறைந்தபட்சம் ஒரு பொதுவான வேலைத்திட்டத்தையோ அல்லது ஒருமித்த கோரிக்கையையோ முன்வைத்திருக்க வேண்டும்.

ஆனால், இங்கே ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு திசையில் நின்று பேசியது வேடிக்கையாக காணப்பட்டது.
இதில் தமிழரசு கட்சி 13 ஆம் திருத்தம் மற்றும் மாகாண சபைத் தேர்தலை முன்னிறுத்தி உரையாடி இருந்தன.
அதே நேரத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஒற்றையாட்சி நிராகரிப்பு மற்றும் சமஷ்டி குறித்துத் தனிப்பட்ட ரீதியில் வலியுறுத்தி இருந்தது.
கருத்து வேறுபாடுகள்
இந்தக் கருத்து வேறுபாடுகள் இந்தியா போன்ற ஒரு வல்லரசு நாட்டிற்கு என்ன செய்தியைச் சொல்லப்போகின்றது ? என்ற கேள்வியும் இங்கு எழுந்தது.
தமிழரசு கட்சியினர் ஒரு ஆவணத்தை இந்திய உயர்ஸ்தானிகரிடம் கையளித்த நிலையில், அதே சந்திப்பில் இருந்த மற்ற தமிழ் தலைவர்களுக்கு அந்த ஆவணத்தில் என்ன இருக்கின்றது என்றே தெரிந்திருக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், ஒரே இலக்கை நோக்கிப் பயணிப்பதாகக் கூறிக்கொள்ளும் தலைவர்களுக்குள் இவ்வளவு பெரிய வெளிப்படைத்தன்மையின்மை இருப்பது பாரிய கேள்வியை எழுப்பி இருந்தது.
இது தமிழ் தேசியப் பரப்பில் நிலவும் ஆரோக்கியமற்ற போட்டித்தன்மையையும் ஒருவரை ஒருவர் முந்திக்கொள்ளும் அரசியல் சாகசத்தையுமே வெளிகாட்டி இருந்தது.
இந்தநிலையில் தமிழ் தலைமைகள் இவ்வாறு சிதறிப்போய்க் கிடப்பது, இலங்கை அரசாங்கத்திற்குத் தான் சாதகமாக அமையும்.
மக்களின் பிரச்சினை
தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைகளை விட, தத்தமது கட்சிகளின் தனித்துவத்தைக் காட்டுவதிலேயே தலைவர்கள் குறியாக இருப்பது, தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தைப் பணயம் வைக்கும் செயலாகும்.
தமிழ் அரசியல் தலைமைகள் இந்தியாவிடம் ஒரு கோரிக்கையை வைப்பதற்கு முன், தமக்கிடையே ஒரு குறைந்தபட்ச இணக்கப்பாட்டை ஏற்படுத்தத் தவறியிருப்பது அவர்களின் அரசியல் முதிர்ச்சியின்மையையே காட்டுகின்றது.
இந்தநிலையில், தமிழ் மக்களின் நலனை விடத் தனது தமது அரசியல் முக்கியம் என்று கருதும் தலைமைகள் இருக்கும் வரை, சர்வதேச அரங்கில் தமிழ் மக்களுக்கான நீதி என்பது எட்டாக்கனியாகவே இருக்கும் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை.
இந்த அரசியல் நிலைப்பாடு குறித்த பக்கத்தை விரிவாக ஆராய்கின்றது கீழுள்ள காணொளி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |