சி.வீ.கேவை ஆச்சரியப்படுத்திய ஜெய்சங்கர் சந்திப்பு - கஜேந்திரகுமார் கருத்து
இலங்கை தமிழ் அரசுக் கட்சி சமஸ்டி கட்சி, ஆகவே சமஷ்டியை பற்றி நாங்கள் பேசாமல் விடுவோமா? இந்திய வெளியுறவு அமைச்சரிடம் அதனையே வலியுறுத்தினோம் என சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
சமஷ்டியை பற்றி நாங்கள் பேசவில்லை என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தது ஆச்சரியமளிக்கிறது எனவும் கூறியுள்ளார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் இது தொடர்பில் கேள்வி எழுப்பியதுடன் சமகால நிலைமைகள் தொடர்பாக இன்று நடத்திய ஊடக சந்திப்பில் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், “இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருடனான சந்திப்பில் அவரிடம் மனு கையளிக்கப்படவில்லை எனவும் உயர்ஸ்தானிகரிடமே மனு கையளிக்கப்பட்டதாக கஜேந்திரகுமார் தெரிவித்திருந்தார்.
சந்தோஷ் ஜாவிடம் மனு
இவ்வாறான சந்திப்புக்களில் அமைச்சர் மனுவை கையேற்பதில்லை என்ற, இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அறிவுத்தலுக்கமைய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடம் மனு கையளிக்கப்பட்டது.

இந்த சந்திப்பின் அடிப்படை நோக்கம், கால தாமதமாகியுள்ள மாகாண சபைத் தேர்தலை நடத்த இலங்கை அரசாங்கத்திடம் இந்தியா வலியுறுத்த வேண்டும் என்பதே ஆகும். மாகாண சபை தேர்தலை நடத்த நானும் ஏனையவர்களும் வலியுறுத்தினோம்.
கலந்துரையாடலை ஆரம்பித்து நானே. கலந்துரையாடலின் இறுதியிலும் சமஸ்டியை பற்றி பேசினோம். பல விடயங்களை பேசினோம்.
சந்திப்பு முடியும் தருணத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு நாம் முன்வைத்த கடிதத்தின் நோக்கத்தை மீண்டும் ஜெய்சங்கருக்கு தெளிவுபடுத்தினோம்.

மாகாண சபை இந்தியா இலங்கையுடன் செய்த ஒப்பந்தம் மூலமே அது உருவானது. அதேபோல குறித்த சந்திப்பில் எமது இறுதி இலக்கும் நோக்கும் கூட்டாட்சி சமஷ்டி தான் என்பதை தெரிவித்தோம்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
மனுவில் இந்த விடயம் இருக்கிறது. நாங்கள் பொய் சொன்னதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சொல்கிறார். நான் உண்மையை தான் கூறுகிறேன்.

சந்திப்பில் பங்கேற்ற ஏனைய கட்சித்தலைவர்கள் இதை தெளிவுபடுத்துமாறு வலியுறுத்தினார்கள். சர்வதேச ரீதியில் எமது இலக்கை அடைவதற்கான ஆதரவு தேவை.
இந்தியா இதற்கு உதவ வேண்டும் என சந்திப்பில் சொன்னோம். நான் சொன்னது பொய் என்றால் இந்தியா மறுதலிக்கும். இராஜதந்திரிகள் எல்லாவற்றுக்கும் பதில் சொல்ல மாட்டார்கள்.செயலிலேயே அதை செய்வார்கள்.
நாங்கள் சமஸ்டி கட்சி, ஆகவே சமஷ்டியை பற்றி பேசாமல் விடுவோமா? நான் சந்திப்பின் பின்பகுதியில் அதனை வலியுறுத்தினேன்” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |