ரணிலுக்கு போட்டியாக அதிபர் தேர்தலில் களமிறங்கும் ஜனக்க ரத்நாயக்க : வெற்றி குறித்தும் நம்பிக்கை
இலங்கை மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு சிறிலங்காவின் அதிபராக தாம் தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் அதிபர் பதவியேற்பது தொடர்பான நடவடிக்கைகளை தற்போது தாம் முன்னெடுத்து வருவதாக கொழும்பு ஊடகமொன்றுடனான நேர்காணலின் போது அவர் கூறியுள்ளார்.
அத்துடன், அடுத்த அதிபர் தேர்தலில் தாம் போட்டியிடுவதை யாராலும் தடுக்க முடியாதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் தேர்தல்
இலங்கையில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடத்தப்படுமென தற்போதைய சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அதிபர் தேர்தலில் தாம் வேட்பாளராக களமிறங்குவது தொடர்பில் மதத்தலைவர்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதாக ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த அதிபர் தேர்தலில் தாம் நிச்சயம் வெற்றி பெறுவதாகவும் நிறைவேற்று அதிகாரமுள்ள அதிபராவதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையின் முன்னணி தனியார் தொலைக்காட்சியின் உரிமையாளரும் தீவிர ராஜபக்ச ஆதரவாளருமான திலித் ஜயவீர மற்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரான தம்மிக்க பெரேரா ஆகியோர் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்த அறிவிப்பை அண்மையில் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.