கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஜப்பானிய பேராசிரியரை நெகிழ வைத்த பெண் துப்புரவு பணியாளர்
தரையில் விழுந்த பணப்பை
கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் தரையில் விழுந்த ஜப்பானிய பேராசிரியர் மத்ருனுர ஜுன்கோவின் பணப்பையை விமான நிலைய பெண் துப்புரவு பணியாளர் எடுத்து உரியவரிடம் சேர்ப்பித்தமை அவரின் நேர்மைக்கு கிடைத்த பரிசாக அமைந்துள்ளது.
இலங்கைக்கு வந்த பேராசிரியர் சிம் அட்டையைப் பெறுவதற்காக விமான நிலையத்தின் வருகை முனையத்தில் உள்ள கையடக்கத் தொலைபேசி நிறுவனமொன்றின் அலுவலகத்திற்குச் சென்றுள்ளார்.
கண்டெடுத்த சுத்திகரிப்பு பணியாளர்
இதன்போது, அவரது பணப்பை தரையில் விழுந்துள்ளது. சிம் அட்டையை பெற்றுக் கொண்டு, பேராசிரியை விமான நிலையத்தில் இருந்து அவர் தங்கியிருந்த விடுதிக்குச் சென்றார், விமான நிலையத்தைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த பி.பி. ஸ்வர்ணலதா என்பவர் இந்தப் பணப்பையைப் பார்த்து, அதை எடுத்து உடனடியாகவே விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
கிடைத்தது பரிசு
அந்த பணப்பையில் 119,390 இலங்கை நாணயம் இருந்தது, அதில் இந்தப் பேராசிரியர் சிம் அட்டை பெற்ற விவரம் அடங்கிய ரசீதும் இருந்தது. விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பேராசிரியையை தொடர்பு கொண்டு விமான நிலையத்திற்கு வந்து பணப்பையை பெற்றுக்கொள்ளுமாறு கூறினர்.
பணப்பையை பெற்றுக்கொண்ட ஜப்பானிய பேராசிரியை, பணப்பையை எடுத்த விமான நிலைய உதவியாளர் பி.பி.ஸ்வர்ணலதா மற்றும் விமான நிலைய பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு பரிசுகளை வழங்கி தனது நன்றியை தெரிவித்தார்.

